தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 May 2023 12:41 AM IST (Updated: 1 May 2023 12:43 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

நாய்கள் தொல்லை

திருச்சி காஜாபேட்டை பெல்சி கிரவுண்டு காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இவை அப்பகுதியில் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது கடிக்க பாய்கின்றன. தற்போது தெருநாய்கள் 8-ம் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறி உள்ளது. இதனால் இப்பகுதியினர் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், காஜாபேட்டை.

பள்ளத்தை மூட கோரிக்கை

உப்பிலியபுரம் ஒன்றியம், வைரிசெட்டிப்பாளையத்தில் சனிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வாரச்சந்தை வளாகத்தில் ஒரு புளியமரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. இதனால் அந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பள்ளத்தினை உடனடியாக மூடப்படாமல் அப்படியே உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்க அதிகவாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகேந்திரன், வைரிசெட்டிப்பாளையம்

உயர் மின் கோபுர விளக்கு சரி செய்யப்படுமா?

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள கோப்பு உய்யகொண்டான் வாய்க்கால் பாலத்தின் அருகே பொதுமக்களின் நலன்கருதி கடந்த சில ஆண்டுகளுக்கு உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உயர் மின் கோபுர விளக்கு பழுதான நிலையில் விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்ந்தப்பட்ட அதிகாரிகள் உயர் கோபுர மின் விளக்கை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஜூயபுரம்.

கழிவறைக்கு தண்ணீர் வசதி வேண்டும்

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆண்களுக்கான இலவச கழிவறை உள்ளது. இதனை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கழிவறையில் தண்ணீர் வசதி இல்லாததால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவறையில் தண்ணீர் வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருச்சி

வடிகால் வசதி வேண்டும்

திருச்சி மாவட்டம்,பாலக்கரை பகுதி செங்குளம் காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சரியான வடிகால் வசதி இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வடிகால் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், பாலக்கரை.


Next Story