பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா்பெட்டி பகுதி

தினத்தந்தி புகாா்பெட்டி பகுதி
ஆபத்தான குழி
கோபியில் உள்ள பாரியூர் ரோடு பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த ரோட்டோரத்தில் ஒரு இடத்தில் குழி ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக அந்த ரோட்டில் இரு சக்கர வாகனங்கள் செல்லும்போது குழி இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றன. எனவே ரோட்டில் உள்ள ஆபத்தான அந்த குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
ரோட்டில் சுற்றித்திரியும் குதிரைகள்
அந்தியூரில் பர்கூர் ரோடு, பவானி ரோடு, சத்தி ரோடு, ஆகிய பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றித்திரிகின்றன. அவ்வாறு சுற்றித்திரியும் குதிரைகளால் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் குதிைரகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு ரோட்டில் தாறுமாறாக ஓடுகின்றன. இதனால் அந்த வழியாக வரும் இரு சக்கர வாகனங்கள் மீது குதிரைகள் மோதிவிடுகின்றன. இதன்காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து விடுகிறார்கள். இதுபோல் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி ரோட்டில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து அப்புறப்படுத்த சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணன், அந்தியூர்.
குண்டும், குழியுமான சாலை
ஈரோடு வில்லரசம்பட்டி நால் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் அந்த ரோடு மண் ரோடாக மாறிவிட்டது. இதனால் மழை பெய்தால் ரோடு சேறும், சகதியுமாக ஆகிவிடும். இதன்காரணமாக அந்த ரோட்டில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே குண்டும், குழியுமாக காணப்படும் ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வில்லரசம்பட்டி.
ஆபத்தான மின் கம்பம்
நம்பியூரில் இருந்து செரங்காடு செல்லும் வழியில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பத்தில் உள்ள கான்கிரீட் காரைகள் பெயர்ந்து அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் மின் கம்பத்தின் மேல் பகுதியில் உடைந்தும் காணப்படுகிறது. எனவே இந்த மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே மின் கம்பம் உடைந்து விழுந்து ஏதேனும் விபத்து ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நம்பியூர்.
தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீர்
சிவகிரி கிழக்கு ரத வீதியில் உள்ள தனியார் மண்டபம் அருகே சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் அந்த பகுதியில் குப்பையும் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை கால்வாயில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்றி தூர்வாரவும், குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிவகிரி.
செயல்படாத போக்குவரத்து சிக்னல்
ஈரோட்டில் இருந்து சத்தி செல்லும் ரோட்டில் உள்ள கவுந்தப்பாடி நால்ரோட்டில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளாக செயல்படவில்லை. இதனால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் அதிகமாக விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து சிக்னல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
---------------------
--------------------------