தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார்பெட்டி

கன்னியாகுமரி

காத்திருக்கும் ஆபத்து

சகாயநகர் ஊராட்சி விசுவாசபுரம் அரசு தொடக்கப்பள்ளியின் பின் பக்கம் தென்னை மரங்கள் வளர்ந்து கட்டிடத்தையொட்டி சாய்ந்த நிலையில் உள்ளது. இது அங்கு படிக்கும் மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்து உள்ளது. தற்போது சூறை காற்று வீசி வருகிறது. இதனால் மரம் சாய்ந்து கட்டிடத்தில் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே காத்திருக்கும் ஆபத்தை உணர்ந்து மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜேஷ்,விசுவாசபுரம்.

சீரமைக்கப்பட்டது

ராஜாக்கமங்கலம்-ஈத்தாமொழி மேற்கு கடற்கரை சாலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கடல்வாழ் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. அதன் அருகே சாலையின் நடுவே குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சென்றது. இதனால் ஏற்பட்ட பள்ளத்தால் வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. அதுபற்றிய செய்தியும், படமும் 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. அதைத்தொடர்ந்து குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு, அந்த பள்ளத்தில் மண் போட்டு நிரப்பி உள்ளனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'-க்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சுகாதார சீர்கேடு

தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் ராமசாமி கோவில்தெருவின் தெற்குபகுதியில் உள்ள கோட்டை சுவரை ஒட்டி கழிவுநீர் ஓடை செல்கிறது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கோட்டை சுவரின் கல் இடுக்குகளின் வழியாக கசியும் கழிவுநீர் மறுபுறமுள்ள தக்கலை - குலசேகரம் சாலையில் வடிந்து அப்பகுதியிலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே கழிவுநீர் தேங்காமல் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், வள்ளியாற்றின்கரை.

சாலையை சீரமைக்க வேண்டும்

விளாத்துறை ஊராட்சிக்குட்பட்ட ஐரேனிபுரம் தெற்கு கரை வயக்க விளை, சானல் கரையோரமாக செல்லும் சாலை பல வருடங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் இந்த வழியாக தனியார் செம்மண் மற்றும் பாறைகள் டிப்பர் லாரி மூலம் அடிக்கடி கொண்டு செல்வதால் சாலை மிகவும் சேதமடைந்து வருகிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜே.எஸ்.ஸ்டீபன், ஐரேனிபுரம்.

இரவு பஸ் தேவை

குலசேகரத்தில் இருந்து பேச்சிப்பாறை சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. குலசேகரம் - பேச்சிப்பாறைக்கு உட்பட்ட மலையோரப் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். குலசேகரத்தில் இருந்து பேச்சிப்பாறைக்கு (தடம் எண் 457 திருவனந்தபுரம்- பேச்சிப்பாறை) பஸ் இரவு 9.30 மணிக்கு கடைசி பஸ்சாக வந்து கொண்டிருந்தது. தற்போது இந்த பஸ் இரவு 9 மணிக்கு குலசேகரத்தில் இருந்து பேச்சிப்பாறைக்கு வருகிறது. பல ஊர்களில் இரவு 11 மணி வரை பஸ் சேவை இருக்கும் நிலையில் பேச்சிப்பாறைக்கு 9 மணிக்கே பஸ் சேவை முடிந்து விடுகிறது. இதனால் வெளியூர்களிலிருந்து இரவு நேரத்தில் பேச்சிப்பாறைக்கு வரும் பயணிகள் பஸ் கிடைக்காமல் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே பேச்சிப்பாறைக்கு இரவு 10 மணி வரை பஸ் சேவை வேண்டும். அதற்கு போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஷிஜூ ஜாண், பேச்சிப்பாறை.


Next Story