'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

அபாய மின்கம்பம்

சின்னமனூர் ஒன்றியம் பொட்டிப்புரம் ஊராட்சி சின்ன பொட்டிப்புரத்தில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து காணப்படுகிறது. பலத்த காற்று வீசும் போதும் மின்கம்பம் முறிந்து விழுந்து விடுமோ? எனும் அச்சத்தில் மக்கள் உள்ளனர். எனவே சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

-ஜெயராஜ், சின்ன பொட்டிப்புரம்.

குடிநீர் தொட்டி சேதம்

நிலக்கோட்டை பேரூராட்சி வளாகத்தில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டி சேதம் அடைந்து விட்டது. குடிநீர் தொட்டியின் மேல்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து விழுகிறது. எனவே குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்.

-அய்யர்பாண்டி, நிலக்கோட்டை.

சுகாதாரக்கேடு

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் மல்லணம்பட்டி ஊராட்சி பூசாரிபட்டியில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், பொது கழிப்பறை எதுவும் இல்லை. இதனால் திறந்தவெளியில் மலம் கழிப்பதால், துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே பூசாரிபட்டியில் பொது கழிப்பறை அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊர்ப்பொதுமக்கள்

சாலை சீரமைக்கப்படுமா?

பழனி அருகே மானூர் ஆற்றுபாலம் வளைவில் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மேலும் வளைவான பகுதியாக இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். எனவே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். -அறிவாசான், மானூர்.

தரைப்பாலத்தில் பள்ளம்

சின்னமனூர் ஒன்றியம் அப்பிபட்டி கிராமத்தில் மெயின்ரோட்டில் உள்ள தரைப்பாலம் சேதம் அடைந்துவிட்டது. தரைப்பாலத்தில் பெரிய பள்ளம் உருவாகிவிட்டதால், இரவில் அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே சேதமடைந்த பாலத்தை இடித்துவிட்டு புதிதாக பாலம் கட்ட வேண்டும். -ரவி, அப்பிபட்டி.

சாலை ஓரத்தில் கழிவுகள்

திண்டுக்கல் அரண்மனை குளத்தின் அருகே மதுரை சாலையின் ஓரத்தில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் சாலை ஓரம் குப்பை, கழிவுகளின் குவியலாக காட்சி அளிப்பதோடு, துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு குப்பை, கழிவுகளை அகற்ற வேண்டும். -யோகேஸ்வரன், திண்டுக்கல்.

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story