'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்திக்கு நன்றி
சின்னமனூர் ஒன்றியம் அப்பிபட்டி மெயின்ரோட்டில் தரைப்பாலம் சேதம் அடைந்தது குறித்து தினத்தந்தியின் புகார்பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிதாக பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. இதற்காக தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
-ரவி, அப்பிபட்டி.
அபாய மரம் அகற்றப்படுமா?
தேனி சிவாஜிநகரில் சாலையோரத்தில் பட்டுப்போன ஒரு மரம் நிற்கிறது. இதனால் பலத்த காற்று வீசும்போது மரம் முறிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் வாகனங்களில் செல்கின்றனர். அந்த அபாய மரத்தை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், சிவாஜிநகர்.
வாகன நிறுத்துமிடம் அவசியம்
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே மெயின்ரோட்டில் ஒருபக்கத்தில் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் சாலையில் எதிர்பக்கம், போலீஸ் கூண்டு பகுதியில் இடம் இருந்தும் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கப்படவில்லை. இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், திண்டுக்கல்.
குப்பை குவியல்
சின்னமனூர் நகராட்சி 17-வது வார்டில் ரைஸ்மில் தெருவில் முனீஸ்வரன் கோவில் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து இருப்பதோடு, துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், சின்னமனூர்.
பயன்படாத கழிப்பறை
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் கரூர், சேலம் பஸ்கள் நிற்கும் பகுதியில் புதிதாக கழிப்பறை கட்டப்பட்டு இருக்கிறது. ஆனால் அது திறக்கப்படாததால் மக்களுக்கு பயன்படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்தின் ஒரு பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே கழிப்பறையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
-ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.
பாலத்தின் அருகே குப்பைகள்
கம்பம் நகராட்சி 13-வது வார்டில் குளத்தின் பாலம் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் நடமாட முடியாத வகையில் துர்நாற்றம் வீசுவதோடு, கால்வாயும் பாழாகும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தின் அருகில் கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு, குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், கம்பம்.
பூட்டி கிடக்கும் கழிப்பறை
பழனியை அடுத்த கீரனூர் பேரூராட்சி 8-வது வார்டில் உள்ள பொது கழிப்பறை பூட்டி கிடக்கிறது. இதனால் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே கழிப்பறையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
-துரைராஜ், கீரனூர்.
சாக்கடை கால்வாய் கட்டப்படுமா?
நிலக்கோட்டை தாலுகா சித்தர்கள்நத்தம் ஊராட்சி குத்தில்நாயக்கன்பட்டியில் சாக்கடை கால்வாய் கட்டுவதற்கு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை சாக்கடை கால்வாய் கட்டவில்லை. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாய் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், குத்தில்நாயக்கன்பட்டி.
சேதமடைந்த குடிநீர் தொட்டி
நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார்பட்டியில் காளியம்மன் கோவில் அருகே உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி சேதம் அடைந்து வருகிறது. இதை சரிசெய்து முறையாக பராமரிக்க வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அய்யர்பாண்டி, விளாம்பட்டி.
தெருவில் ஓடும் கழிவுநீர்
வேடசந்தூர் தாலுகா தட்டாராபட்டி ஊராட்சி வெள்ளனம்பட்டியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. இதனால் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு தெரு மாறியதோடு, துர்நாற்றம் வீசுகிறது. அதை தடுத்து சுகாதாரத்தை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், வௌ்ளனம்பட்டி.
------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.






