'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

சேதம் அடைந்த சாலை

தேனி பூதிபுரத்தில் இருந்து கோடாங்கிபட்டிக்கு செல்லும் சாலை, கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகே சேதம் அடைந்துவிட்டது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும். -குமார், தேனி.

சாக்கடை கால்வாய் மண்

திண்டுக்கல் மாநகராட்சி 15-வது வார்டு சமயபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில் சாக்கடை கால்வாயை தூர்வாரி ஒரு மாதம் ஆகிறது. சாக்கடை கால்வாயை தூர்வாரி மண்ணை அருகிலேயே குவித்து வைத்தனர். ஆனால் இதுவரை அந்த மண்ணை அள்ளவில்லை. இதனால் அது பெரும் இடையூறாக இருக்கிறது. எனவே சாக்கடை கால்வாய் மண்ணை அப்புறப்படுத்த வேண்டும். -சுப்பிரமணி, திண்டுக்கல்.

குண்டும், குழியுமான சாலை

வேடசந்தூர் தாலுகா பாகநத்தம் கிராமம் முள்ளம்பட்டியில் இருந்து தென்பட்டி நந்திவரன்கோவில் வரையுள்ள சாலை சேதமாகி குண்டும், குழியுமாக மாறிவிட்டது. அவசர தேவைக்கு கூட வாகனங்கள் வேகமாக செல்ல முடியவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும். -பொதுமக்கள், முள்ளம்பட்டி.

வணிக வளாகம் திறக்கப்படுமா?

பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மாரியம்மன் கோவில்பட்டிக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் வணிக வளாகம் உள்ளது. இது பல ஆண்டுகளாக பூட்டி கிடப்பதால் காட்சி பொருளாக உள்ளது. அதில் உள்ள கடைகள் அனைத்தும் சேதம் அடைந்துவிட்டன. வணிக வளாகத்தை சீரமைத்து திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். -ராஜா, பழனிசெட்டிபட்டி.

சேதம் அடைந்த மின்கம்பம்

திண்டுக்கல்லை அடுத்த கோவிலூரில் இருந்து கரட்டூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து காணப்படுகிறது. கான்கிரீட் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் எலும்புக்கூடு போன்று காட்சி அளிக்கிறது. பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. அதற்குள் மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும். -ஜெரால்டு, வக்கம்பட்டி.

சாலை சீரமைக்கப்படுமா?

தேனி கே.ஆர்.ஆர். நகரில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் சாக்கடை கால்வாயை கடந்து செல்ல குழாய் பதிக்கப்பட்டது. இதற்காக சாலையில் பள்ளம் தோண்டி குழாய் பதிக்கப்பட்டது. அதனால் சேதம் அடைந்த சாலையை இதுவரை சீரமைக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? -வாகன ஓட்டிகள், தேனி.

புதர் மண்டிய சாக்கடை கால்வாய்

திண்டுக்கல் கக்கன்நகரில் உள்ள பிரதான சாக்கடை கால்வாயில் தரைப்பாலம் அருகே புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் சீராக செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் விஷப்பூச்சிகளின் தொல்லையும் அதிகமாக இருக்கிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி புதர்களை அகற்ற வேண்டும். -மகேஷ், திண்டுக்கல்.

பயனற்ற வழிகாட்டி பலகை

தேனி அருகே குன்னூர் வைகை ஆற்று பாலத்தின் ஓரத்தில் வழிகாட்டி பெயர் பலகையில் இருந்த எழுத்துகள் அழிந்துவிட்டன. இதனால் எந்த ஊருக்கான வழிகாட்டி பலகை என்பது தெரியவில்லை. மேலும் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு வழிகாட்டி பலகை இருந்தும் எழுத்துகள் இல்லாததால் அது பயனற்றதாகி விட்டது. எனவே வழிகாட்டி பெயர் பலகையில் ஊர் பெயர் இருக்கும் வகையில் முறையாக பராமரிக்க வேண்டும். -கண்ணகி, தேனி.

அரசு பஸ் இயக்கப்படுமா?

திண்டுக்கல்லில் இருந்து சிலுவத்தூர், அதிகாரிபட்டி, வி.டி.பட்டி வழியாக மணியக்காரன்பட்டிக்கு காலை 7 மணிக்கு தினமும் அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த அரசு பஸ் கடந்த மாதம் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் அரசு பஸ்சை இயக்க வேண்டும். -பாலா, சிலுவத்தூர்.

சாக்கடை கால்வாய் வசதி தேவை

தேனி பூதிபுரம் பேரூராட்சியில் கொட்டக்குடி ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் தெரு, சாலையோரங்களில் கழிவுநீர் ஓடை போன்று செல்கிறது. அதன்மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை பாடாய்படுத்துகிறது. மேலும் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும். -கதிரவன், தேனி.

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

1 More update

Next Story