'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

சாக்கடை பாலம் தேவை

நிலக்கோட்டை தாலுகா எத்திலோடு ஊராட்சி முத்தாலபுரம் கிழக்கு தெருவில் சாரல் மழைக்கே, சாக்கடை கால்வாய் நிரம்பி விடுகிறது. இதனால் மழைநீரும், கழிவுநீரும் தெருவில் தேங்கி நிற்பதோடு வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே சாக்கடை கால்வாயை அகலப்படுத்துவதோடு, சாக்கடை கால்வாய்க்கு பாலம் அமைக்க வேண்டும். -அய்யர்பாண்டி, விளாம்பட்டி.

தெருவிளக்கு சரிசெய்யப்படுமா?

தேனி மாவட்டம் ஜி.கல்லுப்பட்டியை அடுத்த புனித சூசையப்பர் கிராமம் 3-வது தெருவில் ஒரு தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இரவில் அந்த பகுதி இருளில் மூழ்கிவிடுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே தெருவிளக்கை சரிசெய்ய வேண்டும். -கணேசன், ஜி.கல்லுப்பட்டி.

சேதம் அடைந்த சாலை

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரியம்மாபட்டியில் இருந்து, ஒட்டன்சத்திரத்துக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து விட்டது. சாலை முழுவதும் குண்டும், குழியுமாக மாறிவிட்டதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமம் அடைகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும். -ஜெரால்டு, வக்கம்பட்டி.

அபாய மின்கம்பம்

அம்மையநாயக்கனூர் பேருராட்சி 13-வது வார்டு ஜெகநாதபுரம் ஏ.டி.காலனி கிழக்கு தெருவில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்துவிட்டது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் தெரிந்தபடி ஆபத்தான நிலையில் உள்ளன. பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. அதற்குள் மின்கம்பத்தை மாற்ற வேண்டும். - பொதுமக்கள், ஜெகநாதபுரம்.

குழந்தைகள் மைய மேற்கூரை சேதம்

கம்பம் தாலுகா சாமாண்டிபுரத்தில் உள்ள குழந்தைகள் மையத்தின் மேற்கூரை சேதம் அடைந்து விட்டது. இதனால் சாரல் மழை பெய்தால் கூட மையத்துக்குள் குழந்தைகள் அமர முடியவில்லை. எனவே மையத்தின் மேற்கூரையை சீரமைக்க வேண்டும். -பொதுமக்கள், சாமாண்டிபுரம்.

கழிப்பறை திறக்கப்படுமா?

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டுக்காக பொதுக்கழிப்பறை கட்டப்பட்டு இருக்கிறது. எனினும் இதுவரை அது திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் ரெயில் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கழிப்பறையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். -மூர்த்தி, வேடப்பட்டி.

சாலையோர பள்ளத்தால் விபத்து

உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம்-ராயப்பன்பட்டி செல்லும் சாலையின் ஓரத்தில் கேபிள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடாமல் கிடக்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். விபத்துக்களை தடுக்க சாலையோர பள்ளங்களை மூட வேண்டும். -செல்வபாரதி, கோகிலாபுரம்.

மேம்பாலத்தை பலவீனமாக்கும் செடிகள்

நாகல்நகர் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் செடிகள் முளைத்து வளர்கின்றன. இதனால் மேம்பாலம் பலவீனமாகும் வாய்ப்பு உள்ளது. எனவே மேம்பாலத்தில் முளைத்திருக்கும் செடிகளை அகற்ற வேண்டும். -மகாலட்சுமி, திண்டுக்கல்.

பயணிகள் நிழற்குடை தேவை

கூடலூர் 1-வது வார்டு அரசமரம் பகுதி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. இதை தவிர்க்க பயணிகள் நிழற்குடை வசதி செய்துதர வேண்டும். -பொதுமக்கள், கூடலூர்.

திறந்தவெளி மதுபாராக மாறிய கண்மாய்

தேனி அருகே பூதிப்புரத்தில் உள்ள ராஜபூபால சமுத்திரம் கண்மாய் பகுதியில் தினமும் பலர் மதுபானம் குடிக்கின்றனர். இதனால் கண்மாய் பகுதி முழுவதும் காலி மதுபான பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் குவிந்து கிடப்பதால், கண்மாய் பாழாகி வருகிறது. எனவே கண்மாய் பகுதியில் மது குடிப்பதை தடுப்பதோடு, குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். -பொதுமக்கள், பூதிப்புரம்.

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

1 More update

Next Story