'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகாருக்கு தீர்வு
திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா அருகே பெரிய அளவிலான பள்ளம் இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 'வாட்ஸ்-அப்' மூலம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து 'தினத்தந்தி'யிலும் செய்தி பிரசுரமானது. இதையடுத்து அந்த பள்ளத்தை மூடி மாநகராட்சி அதிகாரிகள் தீர்வு அளித்துள்ளனர். செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகத்துக்கும் நன்றி.
-ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.
சாலை ஆக்கிரமிப்பு
உத்தமபாளையம் பழைய தாலுகா அலுவலகம் எதிரே சாலையோரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காதர்மைதீன், உத்தமபாளையம்.
எரியாத தெருவிளக்குகள்
சீலப்பாடி ஊராட்சி 2-வது வார்டு செல்லமந்தாடி பகுதியில் தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தெருவாசிகள், சீலப்பாடி.
ஓடையால் மண் அரிப்பு
திண்டுக்கல்லை அடுத்த பெரியகோட்டை ஊராட்சி வன்னியப்பாறைப்பட்டியில் உள்ள சிற்றாற்று ஓடையில் மழைக்காலத்தில் தண்ணீர் வரும் போதெல்லாம் அதன் அருகில் உள்ள விளைநிலங்களில் மண் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே விளைநிலங்களில் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேல், திண்டுக்கல்
மண்மேடான சிமெண்டு சாலை
அம்மையநாயக்கனூர் பேரூராட்சி பொம்மணம்பட்டியில் அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை சேதமடைந்துள்ளது. சிமெண்டு பூச்சுகள் முழுமையாக பெயர்ந்து தற்போது சாலை மண்மேடாக காட்சியளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் இந்த சாலை சகதி காடாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
-ரதீஷ்பாண்டியன், பொம்மணம்பட்டி.
தெருநாய்கள் தொல்லை
தேனி பங்களாமேடு திட்டசாலை 2-வது தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. காலை, இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்பவர்கள், சிறுவர், சிறுமிகளை துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
-சரவணக்குமார், தேனி.
எலும்புகூடு போல் மாறும் மின்கம்பம்
திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி ராமலட்சுமி நகரில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் எலும்பு கூடு போல் மின்கம்பம் மாறி வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை உடனே மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அகிலன், திண்டுக்கல்.
புதர்மண்டி கிடக்கும் தடுப்பணை
உத்தமபாளையத்தில் உள்ள முல்லைப்பெரியாற்று தடுப்பணை செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் உள்ளது. இதனால் தடுப்பணையில் தண்ணீரை முழுமையாக தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. மேலும் தடுப்பணைக்கு வரும் தண்ணீரில் அடித்து வரப்படும் குப்பைகளும் புதர்களில் சிக்கி தேங்குகின்றன. இதனால் தண்ணீர் மாசடைகிறது. எனவே தடுப்பணையை தூர்வாருவதுடன் புதர்களையும் அகற்ற வேண்டும்.
-முகமது ரபீக், உத்தமபாளையம்.
சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்
தேனி பாரஸ்ட் ரோட்டில் இருந்து மதுரை சாலைக்கு திரும்பும் பகுதியில் சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாயின் மூடி பெயர்ந்து கால்வாயில் விழுந்தது. இதனால் அந்த இடத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மக்கள்செல்வம், தேனி.
குழாய் உடைந்ததால் வீணாகும் குடிநீர்
கம்பம் 1-வது வார்டு கோம்பை சாலையில் உள்ள நாகம்மன் கோவில் அருகில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபு, கம்பம்.-
-----------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.