'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 July 2022 10:51 PM IST (Updated: 27 July 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

எரியாத தெருவிளக்கு

திண்டுக்கல் ராஜலட்சுமி நகர் பி.ஏ.கே.காலனி பூங்கா அருகே 4 தெருக்கள் சந்திக்கும் இடத்தில் உள்ள தெருவிளக்கு பழுதடைந்து கடந்த 2 நாட்களாக எரியவில்லை. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. திருடர்கள் தொல்லை இருப்பதால் மக்கள் இரவில் வெளியே நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் பழுதடைந்த தெருவிளக்கை அகற்றிவிட்டு வேறு தெருவிளக்கை பொருத்தி நிரந்தர தீர்வு அளிக்க வேண்டும்.

-ராமன், திண்டுக்கல்.

வீடுகளுக்கு மேல் செல்லும் மின்கம்பிகள்

நிலக்கோட்டை தாலுகா நடுப்பட்டியில் வீடுகளின் மேற்கூரைக்கு மேலாக மின்கம்பிகள் செல்கின்றன. இதனால் பலத்த காற்று, மழையின் போது மக்கள் அச்சத்துடன் வீடுகளில் வாழும் நிலை உள்ளது. எனவே மின்கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும்.

-முருகபெருமாள், நடுப்பட்டி.

கழிப்பறை பயன்பாட்டுக்கு வருமா?

சாணார்பட்டியில், கோணப்பட்டி சாலையில் உள்ள கழிப்பறை பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே கழிப்பறையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில்குமார், கோணப்பட்டி.

நூலகம் அமைக்க வேண்டும்

திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டியில் நூலகம் அமைக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் புத்தகங்கள், நாளிதழ்கள் படிப்பதற்காக பக்கத்து ஊர்களில் உள்ள நூலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே நூலகம் அமைக்க வேண்டும்.

-ஜெரால்டு, வக்கம்பட்டி.

சேதமடைந்து வரும் கட்டிடம்

கொடைரோடு பூ மார்க்கெட் கட்டிடம் பழமையான கட்டிடம். பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து வருகிறது. மேலும் கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு சீட்டுகள் சேதமடைந்திருப்பதால் மழைக்காலத்தில் மார்க்கெட்டுக்குள் தண்ணீர் ஒழுகுகிறது. எனவே புதிய கட்டிடம் கட்டவேண்டும்.

-ரதீஷ்பாண்டியன், பொம்மணம்பட்டி.

வீடுகளுக்குள் புகும் மழைநீர்

ஆண்டிப்பட்டி தாலுகா தப்பம்பட்டி ராமகிருஷ்ணாபுரத்தில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கழிவுநீர் கால்வாயில் தேங்கி நிற்கிறது. மேலும் மழைக்காலத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தெருவில் தேங்குவதுடன் வீடுகளுக்குள்ளும் புகுந்துவிடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

-அபிநயா, தப்பம்பட்டி.

சாக்கடை கால்வாய் வசதி வேண்டும்

உத்தமபாளையம் தாலுகா கோம்பை பேரூராட்சி 15-வது வார்டில் சாக்கடை கால்வாய் வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை முறையாக செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபினேஷ்வரன், கோம்பை.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

போடியை அடுத்த வலையப்பட்டி கிராமம் மேற்கு தெருவில் சாக்கடை கால்வாய் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டதுடன் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது.எனவே சாக்கடை கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிராம மக்கள், வலையப்பட்டி.

மழைக்கு ஒழுகும் அரசு பஸ்கள்

ஆண்டிப்பட்டியில் இருந்து குள்ளப்புரம் வழியாக பெரியகுளத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ்சின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. இதனால் மழை பெய்யும் போது மழைநீர் பஸ்சுக்குள் ஒழுகுகிறது. மழைக்காலங்களில் பயணம் செய்யும் மக்கள் நனைந்து கொண்டே செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. எனவே, இந்த பஸ்சின் மேற்கூரையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-திருமுருகன், ஜெயமங்கலம்.

செயல்படாத சுகாதார வளாகம்

கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியில் அமைக்கப்பட்ட பெண்களுக்கான சுகாதார வளாகம் 2 மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை உடனே செயல்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், நாராயணத்தேவன்பட்டி.


Next Story