'தினத்தந்தி' புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்
திருச்சி பைபாஸ் சாலையில் செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பிரமணியன், செட்டிநாயக்கன்பட்டி.
டிரான்ஸ்பார்மரை தாங்கும் கம்பம் சேதம்
வேடசந்தூர் தாலுகா அழகாபுரியில் இருந்து கல்லுப்பட்டி புதூர் செல்லும் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் சேதமடைந்து வருகின்றன. மின்கம்பங்களின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் டிரான்ஸ்பார்மர் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் உடனே மேற்கொள்ள வேண்டும்.
-நாகராஜன், தொன்னிக்கல்பட்டி.
குண்டும், குழியுமான சாலை
பழனியை அடுத்த சின்னக்கலையம்புத்தூரில் இருந்து நெய்க்காரப்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
-முனியப்பன், மானூர்.
சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்
அம்மையநாயக்கனூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.
-ரதீஷ்பாண்டியன், பொம்மணம்பட்டி.
வாகன நிறுத்துமிடத்தில் மின் இணைப்பு இல்லை
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்துக்கு தனியாக மின் இணைப்பு இல்லை. இதனால் இரவில் மின்விளக்கு வசதி இல்லாததால் வாகனங்களை தேடி அலையும் நிலை உள்ளது. மேலும் வாகன நிறுத்துமிடத்துக்கு செல்லும் பாதையும் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், திண்டுக்கல்.
தண்ணீர் வசதி வேண்டும்
பெரியகுளம் தாலுகா ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் வசதி இல்லாததால் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் மாணவ-மாணவிகள் தவித்து வருகின்றனர். எனவே பள்ளியில் தண்ணீர் வசதியை ஏற்படுத்திக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், கல்லுப்பட்டி.
குப்பைத்தொட்டியை மாற்ற வேண்டும்
தேனி அல்லிநகரம் காந்திநகர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அதில் குப்பைகளை கொட்டினாலும் அவை சாலையில் சிதறி விழுகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே குப்பை தொட்டியை அதிகாரிகள் மாற்ற வேண்டும்.
-நாகராஜ், தேனி.
மதுபான பாராகும் சாலையோரங்கள்
தேனி கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகில் கம்பம் சாலையோர பகுதிகள் மாலை நேரங்களில் திறந்தவெளி மதுபான பார் ஆக மாறி வருகிறது. அந்த பகுதியில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடு இன்றி தள்ளுவண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியை மறைவிடமாக பயன்படுத்தி பலரும் மது அருந்தி வருகின்றனர். மது அருந்திவிட்டு பாட்டில்களையும் அங்கேயே உடைத்து போட்டுவிட்டு செல்கின்றனர். தேனியின் பிரதான சாலையாக இருந்த போதிலும் இதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே, இப்பகுதியை திறந்தவெளி மதுபான பார் ஆக மாறுவதை தடுக்கவும், அப்பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், தேனி.
அச்சுறுத்தும் அசுர வேக பஸ்கள்
தேனி நகரில் தனியார் பஸ்கள் அசுர வேகத்தில் இயக்கப்படுகின்றன. அரசு பஸ்கள் மற்றும் பிற தனியார் பஸ்களுடன் போட்டிபோட்டு, பயணிகளை ஏற்ற வேண்டும் என்பதற்காக நகர் பகுதி சாலையிலும் அசுர வேகத்தில் முந்திச் செல்கின்றன. இதனால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. இதே நிலைமை நீடித்தால் தேனியில் கோர விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தனியார் பஸ்களின் அசுர வேக பயணத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விக்னேஷ், தேனி.
சேதம் அடைந்த தெருப்பாதை
தேனி அல்லிநகரம் வெங்கலாநகரில் தெருப்பாதை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகள் அதிக அளவில் இந்த பாதையில் சென்று வரும் நிலையில் இந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த தெருப்பாதையை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மக்கள்செல்வம், தேனி.
------------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
----------------------