தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
சாலையின் அவலம்
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குளச்சல் நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதிலும் குளச்சல் காந்தி ஜங்ஷனில் இருந்து பீச் ரோடு வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சிறிது கவனக்குறைவாக சென்றாலும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கபீர், குளச்சல்.
விபத்தில் சிக்கும் அபாயம்
சாமிதோப்பில் இருந்து வடுகன்பற்று செல்லும் சாலையில் கவர்குளம் தேரிவிளை ரெயில்வே கிராஸ் அருகில் கால்வாயின் மேல் சிறு பாலம் உள்ளது. இதன் பக்க சுவர்கள் சாலையின் மட்டத்திற்கு சமமாகவே உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணம் செய்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் இருக்கிறது. எனவே இரு பக்க சுவர்களின் உயரத்தை அதிகரித்து விபத்தை தடுக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.
நீர் மாசுபடும் நிலை
மார்த்தாண்டத்தில் இருந்து ஞாறான்விளை செல்லும் சாலையில் உள்ள நேசமணி பாலத்தின் கீழே ஆறு செல்கிறது. அந்த ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டுகிறார்கள். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளை கொண்டு வந்து போடுவதால் ஆற்று நீர் மாசுபடும் நிலை உள்ளது. எனவே இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிரன், மார்த்தாண்டம்.
சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்
தலக்குளம் ஊராட்சியில் உள்ள ஆலயன்குளத்து நீரை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த குளத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் கரையில் உள்ள பழமையான ஆலமரம் முறிந்து குளத்தில் விழும் நிலையில் உள்ளது. எனவே குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.எஸ்.மூர்த்தி, தலக்குளம்
கட்டிடத்தை காப்பாற்ற வேண்டும்
அருமநல்லூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அந்த பகுதி மக்கள் இங்கு வந்து தான் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். எனவே எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தின் முன் மரம் வளர்ந்து நிற்கிறது. அது அங்குள்ள மேற்கூரையை இடித்தபடி உள்ளது. இதனால் கட்டிடம் சேதமடையும் நிலை உள்ளது. எனவே கட்டிடத்தை காப்பாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிகண்டன், தெள்ளாந்தி.
மக்கள் அவதி
நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் கிழக்கு சன்னதி தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரிவர மூடாமல் விட்டு சென்று விட்டனர். இதனால் மழை பெய்தால் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் நடந்து செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் கீழே விழும் நிலை உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.
---






