'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
இடியும் நிலையில் தண்ணீர் தொட்டி
அம்மையநாயக்கனூர் பேரூராட்சி நக்கம்பட்டியில் உள்ள தண்ணீர் தொட்டி பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தண்ணீர் தொட்டி சுவற்றில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. எனவே சேதமடைந்த தண்ணீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிய தண்ணீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரதீஷ்பாண்டியன், நக்கம்பட்டி.
சாலையில் தேங்கும் மழைநீர்
திண்டுக்கல்-திருச்சி சாலையில் என்.ஜி.ஓ. காலனி மேம்பாலம் அருகே மழைக்காலங்களில் தண்ணீர் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. அந்த இடத்தில் தெருவிளக்கு வசதியும் இல்லை. இதனால் இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மழைநீர் தேங்கி இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணன், திண்டுக்கல்.
பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம்
அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 8-வது வார்டில் உள்ள பெண்கள் சுகாதார வளாகம் பல மாதங்களாக பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் பெண்கள், திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சுகாதார வளாகத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-அய்யர்பாண்டி, விளாம்பட்டி.
சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள்
திண்டுக்கல், நத்தம் சாலையில் ஐ.டி.ஐ. மேடு அருகே சாலையோரத்தில் தனியார் சுற்றுலா வாகனங்களை நிறுத்திவிடுகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலன், குள்ளனம்பட்டி,
எரியாத தெருவிளக்குகள்
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து எழில்நகருக்கு செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வழிப்பறி பயமும் உள்ளது. எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை விரைவில் சீரமைக்க வேண்டும்.
-முருகன், திண்டுக்கல்.
வாகன நிறுத்தமாக மாறிய பஸ் நிலையம்
கடமலைக்குண்டு பஸ் நிலையம் கடந்த பல மாதங்களாக பயன்படாமல் உள்ளது. அரசு, தனியார் பஸ்கள் எதுவும் பஸ் நிலையத்துக்குள் வருவதில்லை. இதனால் கார், ஆட்டோ, லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துமிடமாக பஸ் நிலையம் தற்போது மாறியுள்ளது. எனவே பஸ் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-வேல்முருகன், கடமலைக்குண்டு.
பயன்பாடு இன்றி கிடக்கும் ஆழ்துளை கிணறு
பெரியகுளத்தை அடுத்த இ.புதுக்கோட்டை கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மின்மோட்டார் பழுதால் பயன்பாடு இன்றி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து ஆழ்துளை கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-சூரியபிரகாஷ், இ.புதுக்கோட்டை.
பாதாள சாக்கடையில் அடைப்பு
பெரியகுளம் நகரில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடையில் பராமரிப்பு பணி முறையாக மேற்கொள்ளப்படாததால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே பாதாள சாக்கடை அடைப்பை விரைவில் சரிசெய்ய வேண்டும்.
-சண்முகசுந்தரம், பெரியகுளம்.
மதுபான பாரான பஸ் நிலையம்
தேனி புதிய பஸ்நிலைய கட்டிடத்தின் மேல்பகுதியில் மதுபான பிரியர்கள் பகல், இரவு என அனைத்து நேரங்களிலும் அமர்ந்து மதுகுடிக்கின்றனர். மேலும் காலி பாட்டில்களையும் அங்கேயே போட்டுச்செல்கின்றனர். இதனால் பஸ் நிலைய கட்டிடம் திறந்தவெளி மதுபான பாராக மாறியுள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மக்கள் செல்வம், தேனி.
குடிநீர் தட்டுப்பாடு
உத்தமபாளையம் பேரூராட்சி 2, 10, 14-வது வார்டுகளில் 10 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட நேரம் வரையே வழங்கப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. முறையாக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், உத்தமபாளையம்.
------------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
----------------------