'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

குண்டும், குழியுமான சாலை

நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயமும் ஒன்று. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், மூலைக்கரைப்பட்டியில் இருந்து கூந்தன்குளம் வரையிலான சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த வழியாக சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். ஆகவே, அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- பி.மணிகண்டன், கடம்பன்குளம்.

கிணற்று மூடியில் வளர்ந்த செடிகள்

பாளையங்கோட்டை தாலுகா முத்தூர் ஊராட்சி கொடிக்குளம் கிராமத்தில் உள்ள குடிநீர் கிணற்றின் மீது மூடி போடப்பட்டு உள்ளது. அதன் மீது செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுவதால், சுகாதாரக்கேடு நிலவுகிறது. இதில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்ற ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகிறேன்.

- முருகன், கொடிக்குளம்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

ராதாபுரம் தாலுகா திருவம்பலாபுரம் பஞ்சாயத்து ஆத்தங்கரை பள்ளிவாசலில் இருந்து சங்கனாபுரம் செல்லும் சாலையோரத்தில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கியபடி உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகிறார்கள். அந்த மின்கம்பிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கோபாலகிருஷ்ணன், ஆத்தங்கரை பள்ளிவாசல்.

குடிநீரில் குளோரின் கலப்பு அதிகரிப்பு

நெல்லை மாநகராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றில் உறைகிணறுகள் அமைத்து, அதில் இருந்து குடிநீர் எடுத்து பொதுமக்களுக்கு குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் சுகாதாரத்தை பேணும் வகையில் இந்த குடிநீரில் குளோரின் பொடி கலக்கப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தச்சநல்லூர் மண்டலம் சிந்துபூந்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீரில் குளோரின் அளவு அதிகமாக உள்ளது. இதனால் அந்த குடிநீரை குடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, தேவையான அளவுக்கு, சரிவிகித அளவில் மட்டுமே குளோரின் கலப்பதை அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராமசுப்பிரமணியன், சிந்துபூந்துறை.

மின்கோபுரத்தை சூழ்ந்த கொடிகள்

மருதூர் அணைக்கட்டு அருகில் தாமிரபரணி ஆற்றில் உயர் மின்அழுத்த கம்பிகள் செல்லக்கூடிய கோபுரம் உள்ளது. அந்த மின்கோபுரத்தை சுற்றிலும் ெசடி, கொடிகள் மற்றும் புதர்கள் மண்டி கிடக்கின்றன. மேலும் மின்கோபுரத்திலும் கொடிகள் படர்ந்து காணப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் மின்கோபுரத்தை சூழ்ந்துள்ள செடி, கொடி, புதர்களை அகற்ற ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகிறேன்.

- பிரவீன் பெரியசாமி, மணப்படைவீடு.

சாலை சீரமைக்கப்படுமா?

தமிழக-கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் மதுரை திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.வளைவு சாலை உள்ளது. இந்த வழியாக தான் சபரிமலை அய்யப்பன் கோவில், திருவனந்தபுரம் மருத்துவமனை, விமான நிலையம் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் எப்போதும் வாகனங்கள் சென்று வந்த வண்ணம் இருக்கும். மேலும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்களும் அதிகளவில் சென்று வருகின்றன. இந்த எஸ்.வளைவு சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?

- கனியமுதன், செங்கோட்டை.

ஒளிராத தெருவிளக்குகள்

சங்கரன்கோவில் தாலுகா பனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வயலிமிட்டா ஊரில் தெருவிளக்குகள் ஒளிரவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் வெளியே சென்று வர சிரமப்படுகின்றனர். எனவே, தெருவிளக்குகள் ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

- ஜெயசீலன், வயலிமிட்டா.

நுழைவுவாயில் கதவு அமைக்கப்படுமா?

கடையம் யூனியன் பொட்டல்புதூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன. அப்போது நுழைவுவாயிலில் இருந்த இரும்பு கதவு அகற்றப்பட்டு பணிகள் நடந்தன. அதன்பிறகு கதவை அமைக்காததால், பள்ளி வளாகத்துக்குள் ஆடு, மாடுகள் நுழைந்து மாணவர்களை அச்சுறுத்துகின்றன. ஆகையால் நுழைவுவாயில் கதவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

- திருக்குமரன், கடையம்.

காட்சிப்பொருளான கிணறு

சங்கரன்கோவில் 24-வது வார்டு ஆதிசங்கர விநாயகர் கோவில் தெருவில் நகராட்சி தொடக்கப்பள்ளி அருகில் பொது கிணறு உள்ளது. முன்பு பல ஆண்டுகளாக பொதுமக்களின் தாகம் தீர்த்த இந்த கிணறு தற்போது பயன்பாடற்று காட்சிப்பொருளாக உள்ளது. எனவே, அந்த கிணற்றில் மின்மோட்டார் பொருத்தி பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

- சங்கரநாராயணன், சங்கரன்கோவில்.

பாலத்தில் விழுந்த ஓட்டை

முக்கூடல்-ஆலங்குளம் சாலையில் சிங்கம்பாறை விலக்கில் தண்ணீர் செல்ல பதிக்கப்பட்டுள்ள குழாய்க்கு மேல் பாலம் உள்ளது. தற்போது அந்த பாலம் சேதம் அடைந்து ஓட்டை விழுந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர். அந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- ஆறுமுககுமார், முக்கூடல்.

ஒளிராத மின்விளக்குகள்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மின்விளக்குகள் உள்ளன. அந்த மின்விளக்குகளுக்கு செல்லும் வயர், அந்த வழியாக சென்ற லாரி மோதியதில் அறுந்து கீழே விழுந்தது. இதனால் மின்விளக்குகள் ஒளிராததால் இரவு நேரத்தில் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, மின்வயரை சரிசெய்து மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

- மாரிமுத்து, பெருமாள்நகர்.

புதிய பஸ்கள் இயக்கப்படுமா?

திருச்செந்தூரில் இருந்து உடன்குடிக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த பஸ்கள் அனைத்திலும் இருக்கைகள் கிழிந்து காணப்படுகின்றன. மேலும் இருக்கைகளின் பின்புறத்தில் உள்ள ஸ்குரு மற்றும் ஆணிகள் பயணிகளின் ஆடைகளை பதம் பார்க்கின்றன. மேலும், பஸ்கள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்று விடுவதாலும் பயணிகள் அவதிப்படுகின்றனர். இந்த அவலத்தை போக்க புதிய பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

- ஏ.வி.பி.மோகனசுந்தரம், திருச்செந்தூர்.

டாக்டர்கள் பற்றாக்குறை

உடன்குடி அரசு ஆஸ்பத்திரியில் 2 டாக்டர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இன்னும் 3 டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு டாக்டர் விடுமுறையில் சென்றால், ஒருவர் மட்டுமே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய நிலை உள்ளது. ஆகையால் காலிப்பணியிடங்களை நிரப்பி, 24 மணி நேரமும் ஆஸ்பத்திரி செயல்பட செய்தால் பொதுமக்கள் பெரிதும் பயன் அடைவர்.

- கேசவன், உடன்குடி.

ஆபத்தான மின்கம்பம்

கோவில்பட்டி மதுரை மெயின் ரோடு மாதாங்கோவில் தெரு அருகில் கிழக்குப்பகுதியில் செல்லும் சாலையில் 3-வது மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. குறிப்பாக அதன் அடிப்பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பாலமுருகன், கோவில்பட்டி.

பஸ் நிலையத்துக்குள் பஸ் வருமா?

கோவில்பட்டி புதிய பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்லாமல், அதன் அருகில் உள்ள சாலையில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், நோயுற்றவர்கள் உள்ளிட்டோர் மழையிலும், வெயிலிலும் நின்று அவதிப்படுகிறார்கள். எனவே, பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?

- ஜெயினுலாப்தீன், நெல்லை டவுன்.


Next Story