'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

புகார் பெட்டி செய்தி எதிரொலி

நெல்லை சந்திப்பில் இருந்து வீரவநல்லூர் அருகே உள்ள திருப்புடைமருதூருக்கு தினமும் காலை, மாலையில் இயங்கி வரும் அரசு பஸ் சரியான நேரத்துக்கு வருவது இல்லை என்றும், இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுவதாகவும் திருப்புடைமருதூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக தற்போது அரசு பஸ் சரியான நேரத்துக்கு வந்து செல்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

பெயர் பலகை சரிசெய்யப்படுமா?

ராதாபுரம் தாலுகா இருக்கன்துறை பஞ்சாயத்து சேனார்குளத்தில் ஊர் பெயர் பலகை உள்ளது. அந்த பெயர் பலகை உடைந்து சேதம் அடைந்து காணப்படுகிறது. அதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

- ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

சேதமடைந்த மின்கம்பம்

களக்காடு பெல்ஜியம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் தங்கும் விடுதி முன்பு மின்கம்பம் ஒன்று உள்ளது. அது சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. ஆபத்தான அந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- சசிகுமார், கீழபத்தை.

பஸ் மீண்டும் ஊருக்குள் வருமா?

நாங்குநேரியில் இருந்து கழுவூர் செல்லும் டவுன் பஸ் (தடம் எண்-6) பாப்பான்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலங்குளம், கண்மணியன்குடியிருப்பு, பொத்தையடி ஆகிய ஊர்கள் வழியாக இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அந்த பஸ் இந்த ஊர்களுக்குள் வராமல் மெயின் ரோடு வழியாக சென்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, முன்பு போல் அந்த பஸ் ஊர்களுக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?

- தனசிங், ஆலங்குளம்.

இடிந்து விழும் நிலையில் மின்மோட்டார் அறை

நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு கடன்பன்குளம் கிராமத்தின் மேற்கு பகுதியில், சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்கு மின்மோட்டார் அறை உள்ளது. அந்த அறை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பாக அதை இடித்துவிட்டு புதிய அறை கட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

- மணிகண்டன், கடம்பன்குளம்.

கிடப்பில் போடப்பட்ட பணி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இருந்து சுரண்டை செல்லும் சாலையின் ஓரத்தில் இணையவழி கேபிள்கள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பல நாட்களாக அந்த பணி முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பணியின்போது அங்குள்ள குடிநீர் குழாயும் உடைந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகமும் தடைப்பட்டு உள்ளது. இதை சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக சரிசெய்ய வேண்டுகிறேன்.

- சந்திரன், பாவூர்சத்திரம்.

சாலை சீரமைக்கப்படுமா?

குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் சாலையில் கல்குவாரி பகுதி வரை சாலையின் இருபுறமும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்து காயம் அடையும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. ஆகையால் அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

- பரமசிவம், பழைய குற்றாலம்.

ஜல்லிக்கற்களால் இடையூறு

வாசுதேவநல்லூர் சுற்றுவட்டார கிராம சாலைகள் மற்றும் தென்காசி-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லிக்கற்கள் ஏற்றப்பட்ட டிராக்டர், லாரிகள் வந்து செல்கின்றன. அவ்வாறு வரும்போது ஜல்லிக்கற்களை அதிகளவில் ஏற்றி வருவதால், வேகத்தடை மற்றும் வளைவுகளில் அவை கீழே விழுந்து கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே லாரி, டிராக்டர்களில் ஜல்லிக்கற்கள் மீது வலை அமைத்து வரவும், சரியான அளவு ஜல்லிக்கற்களை ஏற்றி வரவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சிவபெருமாள், வாசுதேவநல்லூர்.

நிறுத்தப்பட்ட பஸ் இயக்கப்படுமா?

அம்பையில் இருந்து மேலஆம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூருக்கு டவுன் பஸ் (தடம் எண்-3ஏ) இயங்கி வந்தது. அந்த பஸ் அம்பையில் இருந்து மதியம் 1 மணி, மாலை 6 மணி, இரவு 9.30 மணிக்கு கருத்தப்பிள்ளையூருக்கும், அதிகாலை 6 மணிக்கு கருத்தப்பிள்ளையூரில் இருந்து அம்பைக்கும் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த பஸ் பல மாதங்களாக நிறுத்தப்பட்டு விட்டதால், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அந்த பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

- கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

தெருவில் ஓடும் கழிவுநீர்

வாசுதேவநல்லூர் யூனியன் ராமநாதபுரம் கிராமம் விநாயகர் கோவில் தெருவில் உள்ள வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி தெருவில் ஓடுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் ெகாள்கிறேன்.

- சித்திரைக்கனி, ராமநாதபுரம்.

மின்விளக்கு வேண்டும்

தூத்துக்குடி-கோவில்பட்டி நெடுஞ்சாலையில் தெற்கு திட்டங்குளம் பகுதியில் வேகத்தடை ஒன்று உள்ளது. இதன் அருகில் நகராட்சி சார்பில் முன்பு மின்விளக்கு அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த மின்விளக்கை அகற்றி விட்டனர். இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் சென்று மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, அங்கு மீண்டும் மின்விளக்கு அமைக்க வேண்டும்.

- விஜயகுமார், தெற்கு திட்டங்குளம்.

பழுதடைந்த அடிபம்பு

கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள முத்து ஆனந்தபுரம் முதல் தெருவில் உள்ள அடிபம்பு பழுதடைந்து காணப்படுகிறது. அதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பாலமுருகன், கோவில்பட்டி.

தடுப்புகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சம்

ஆத்தூரை அடுத்துள்ள முக்காணி தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புதிய பாலமும், பழைய பாலமும் உள்ளது. திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் புதிய பாலத்திலும், தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வரும் வாகனங்கள் பழைய பாலத்திலும் வருகின்றன. கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது, பழைய பாலத்தின் ஓரத்தில் உள்ள இரும்பு தடுப்பு கம்பிகள் உடைந்து சிறிது தூரம் தடுப்பே இல்லாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். ஆகவே, அங்கு இரும்பு தடுப்புகள் அமைக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

- ஆறுமுகம், ஆறுமுகநேரி.

மின்கம்பம் மாற்றப்படுமா?

சிவகளை நயினார்புரம் பகுதியில் மின்கம்பம் ஒன்று சேதமடைந்து காணப்படுகிறது. அதன் அடிப்பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்தான அந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

- ஜெபமாலை, நயினார்புரம்.

பஸ் சேவை நீட்டிக்கப்படுமா?

நெல்லை சந்்திப்பில் இருந்து கருங்குளத்துக்கு அதிகளவில் டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன. கருங்குளத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் தாதன்குளம் உள்ளது. இந்த இரு ஊர்களுக்கும் இடையே அரசு ஆஸ்பத்திரி இருக்கிறது. தாதன்குளத்தில் ரெயில் நிலையம் உள்ளது. எனவே, கருங்குளம் வந்து செல்லும் பஸ் சேவையை தாதன்குளம் வரை நீட்டித்தால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அரசு ஆஸ்பத்திரிக்கு வருவோர், ரெயில் மூலம் நெல்லை, திருச்செந்தூர் செல்வோர் உள்ளிட்டோர் பயன் அடைவர். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

- ஜோஸ்வா, தாதன்குளம்.


Next Story