'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

ஆக்கிரமிப்பின் பிடியில் நீர்நிலைகள்

திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. மேலும் தூர்வாரப்படாமலும் உள்ளன. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், தூர்வாரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-ராஜேஷ்குமார், திண்டுக்கல்.

செயல்படாத குடிநீர் வழங்கும் எந்திரம்

பழனி பஸ் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் குடிநீர் வழங்கும் எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை செயல்படாமல் காட்சிப்பொருளாகவே இருக்கிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே செயல்படாமல் உள்ள குடிநீர் வழங்கும் எந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-மணி, பழனி.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

செந்துறை சந்தைப்பேட்டையில் புதிதாக சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடக்கிறது. ஆனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல மாற்று ஏற்பாடு செய்யவில்லை. இதனால் கழிவுநீர் சாலையில் குளம் போல் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெய்சன், சந்தைப்பேட்டை.

பிளாஸ்டிக் குப்பை குவியல்

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் மேற்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. அந்த நீரில் கொசுப்புழுக்கள் உருவாகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே குப்பைகளை அகற்றுவதுடன் கால்வாயையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரன், திண்டுக்கல்.

சாலையில் சிதறி விழும் குப்பைகள்

பழனி நகராட்சி வார்டு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் நகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான வாகனங்களில் அள்ளிச்செல்லப்படுகிறது. அப்போது குப்பைகள் சிதறி சாலையில் விழாமல் இருக்க தார்பாய் சீட்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மூடாமல் திறந்த நிலையில் கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக சாலையில் குப்பைகள் சிதறி விழுவதால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகள் சாலையில் விழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நவீன், பழனி.

அரசு பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

தேனியை அடுத்த தேவாரத்தில் இருந்து மதுரைக்கு தினமும் அதிகாலை 4 மணி அளவில் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அரசு பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பாண்டியன், தேவாரம்.

குடிநீர் குழாயை சூழ்ந்த செடி-கொடிகள்

தேனியை அடுத்த ஜி.கல்லுப்பட்டி மங்கம்மாள் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள குடிநீர் குழாயை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் உள்ளது. செடி-கொடிகள் சூழ்ந்து கிடப்பதால் பொதுமக்களால் அங்கு தண்ணீர் பிடிக்க இயலவில்லை. எனவே புதரை விரைவில் அகற்ற வேண்டும்.

-கணேசன், ஜி.கல்லுப்பட்டி.

பாலத்து சாலையில் விரிசல்

தேனி-தேவாரம் சாலையில் டொம்பச்சியம்மன் கண்மாயின் குறுக்காக கட்டப்பட்ட பாலத்தில் உள்ள சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் விரிசல் பெரிதாகி பெரிய அளவில் பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலத்தில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், உப்புக்கோட்டை.

மாணவ-மாணவிகள் அவதி

கடமலைக்குண்டுவில் இருந்து பாலூத்து கிராமத்துக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் கடந்த 2 ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த கிராமத்தில் இருந்து கடமலைக்குண்டுவில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அரசு பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில், பாலூத்து.

ஓடையில் கொட்டப்படும் குப்பைகள்

தேனி அரண்மனை புதூரில் இருந்து கொடுவிலார்பட்டி செல்லும் சாலையில் உள்ள காட்டாற்று ஓடை பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்பதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுருளி, தேனி.-

-உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

----------------------


Next Story