'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
சாலை வசதி வேண்டும்
வடமதுரையை அடுத்த தும்மலக்குண்டு 7-வது வார்டில் சாலை வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் தெருவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அப்போது தெருவை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாலை வசதியை ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயக்குமார், வடமதுரை.
குண்டும், குழியுமான சாலை
திண்டுக்கல்-பழனி பைபாஸ் சாலையில் ரெட்டியார்சத்திரம் வரை பராமரிப்பு இல்லாததால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரேம், திண்டுக்கல்.
தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்
திண்டுக்கல் மாநகராட்சி 37-வது வார்டு சிவபெருமாள் நகரில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சம்பத், திண்டுக்கல்.
சாக்கடை கால்வாய் பாலம் சேதம்
ஆத்தூர் தாலுகா அழகர்நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து எம்.புதுப்பட்டி பொது கழிப்பறை வரை அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் கால்வாய் முழுவதும் மண் மூடிய நிலையில் உள்ளது. மேலும் சாக்கடை கால்வாயின் மேல்பகுதியில் அமைக்கப்பட்ட பாலமும் சேதமடைந்துள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாருவதுடன் பாலத்தையும் அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.
-கிராம மக்கள், அழகர்நாயக்கன்பட்டி.
சோதனை சாவடி பயன்பாட்டுக்கு வருமா?
உத்தமபாளையம் கோகிலாபுரம் விலக்கு பகுதியில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட போலீஸ் சோதனை சாவடி இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் சமூக விரோத செயல்கள் அடிக்கடி அந்த பகுதியில் நடக்கிறது. எனவே சோதனை சாவடியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பரசுராமன், உத்தமபாளையம்.
பள்ளத்தால் விபத்து அபாயம்
தேனியை அடுத்த மேலச்சொக்கநாதபுரத்தில் பாதாள சாக்கடை பணிக்காக சாலையில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் முறையாக மூடப்படவில்லை. மேலும் மழைக்காலங்களில் அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், மேலச்சொக்கநாதபுரம்.
பூட்டிக்கிடக்கும் புறக்காவல் நிலையம்
கம்பம் புது பஸ்நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்புக்காக புறக்காவல் நிலையம் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக புறக்காவல் நிலைய பணிக்கு போலீசார் நியமிக்கப்படுவதில்லை. இதனால் புறக்காவல் நிலையம் பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக பஸ் நிலையத்தில் தற்போது குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே புறக்காவல் நிலைய பணிக்கு போலீசாரை நியமிக்க வேண்டும்.
-குமார், கம்பம்.
குறுகலான பாலத்தால் விபத்து
மேகமலை அருவிக்கு செல்லும் சாலையில் குமணன்தொழு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலத்தில் சாலை குறுகலாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ், குமணன்தொழு.
------------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.