'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

பூங்கா திறக்கப்படுமா?

நெல்லை மேலப்பாளையத்தில் மாநகராட்சி சார்பில் 3 பூங்காக்கள் செயல்பட்டு வந்தது. இதில் 2 பூங்காக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டு விட்டது. மீதமுள்ள ஒரு பூங்காவும் கடந்த ஒரு வாரத்திற்கு முன் மூடப்பட்டது. இதனால் சிறுவர்கள் பூங்காக்களில் விளையாட முடியாமலும், பெரியவர்கள் நடைபயிற்சிக்கு செல்ல முடியாமலும் அவதிப்படுகிறார்கள். எனவே, இந்த 3 பூங்காக்களையும் திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

சாகுல் அமீது, மேலப்பாளையம்.

உடைந்து கிடக்கும் வழிகாட்டி பலகை

திசையன்விளை காமராஜர் சிலை அருகே உடன்குடி செல்வதற்காக வழிகாட்டி பலகை ஒன்று இருந்தது. தற்போது, அந்த வழிகாட்டி பலகை உடைந்து கீழே விழுந்து கிடக்கிறது. இதனால் புதிதாக அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் ஊருக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் குழம்புகிறார்கள். ஆகவே, இந்த வழிகாட்டி பலகையை உடனடியாக சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி

பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகர் மகாராஜா பிள்ளை தெருவில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதியில் மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே, குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மகாராஜன், பாளையங்கோட்டை.

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை

மேலப்பாளையம் 48-வது வார்டு அம்பிகாபுரம் வடக்கு தெரு அருகே பாதாள சாக்கடை மூடி உடைந்து விட்டதால் திறந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், கால்நடைகள் பாதாள சாக்கடையில் தவறி விழும் அபாயம் உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திறக்கு கிடக்கும் பாதாள சாக்கடைக்கு மூடி பொருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

காதர் மீரான், மேலப்பாளையம்.

பழுதடைந்த சாலை

ஆத்தங்கரைபள்ளிவாசலில் இருந்து தோப்புவிளை, இரம்மதுபுரம், உறுமன்குளம் வழியாக பெட்டைகுளம் வரை சாலை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு குண்டும், குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுகிறேன்.

பிச்சை, தோப்புவிளை.

எரியாத தெருவிளக்கு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் வடக்கூர் மேலத்தெருவில் மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் நலன் கருதி தெரு விளக்கு எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பாபு, குலசேகரன்பட்டினம்.

பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படுமா?

கோவில்பட்டி முகம்மது சாலியாபுரம் பகுதியில் முழுவதும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த பகுதியை சுற்றியுள்ள மற்ற பகுதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இங்கு மட்டும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படவில்லை. எனவே, இந்த பகுதியில் சாலையை சீரமைத்து பேவர் பிளாக் கற்கள் பதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

பாலமுருகன், கோவில்பட்டி.

சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

திருச்செந்தூர் பாரதியார் தெருவில் குடிநீர் வந்து பல நாட்கள் ஆகிவிட்டது. இதனால் குடிநீர் எடுக்க பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் பஸ் நிலையத்திற்கு சென்று குடிநீர் எடுத்துவரும் அவல நிலை உள்ளது. எனவே, இந்த தெருவில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

ஜெயக்குமார், திருச்செந்தூர்.

வாகன ஓட்டிகள் அவதி

தூத்துக்குடி 1-ம் ரெயில்வே கேட் பகுதியில் அடுத்தடுத்து 3 தண்டவாளங்கள் உள்ளன. இதற்கு இடையில் உள்ள தார்சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் அதில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். ஆகவே, அந்த தார் சாலையை சரிசெய்ய வேண்டுகிறேன்.

கருப்பையா, தூத்துக்குடி.

போக்குவரத்தை சீரமைக்க காவலர்கள் வேண்டும்

உடன்குடி மெயின் பஜாரில் நான்கு சந்திப்பில் போக்குவரத்து காவலர்கள் இல்லாததால் ஒரு வழிப்பாதையான கீழ பஜார் பகுதியில் வாகனங்கள் அத்துமீறி செல்கிறது. இதனால் பஜார் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க உடன்குடி பஜார் நான்கு சந்திப்பு பகுதியில் போக்குவரத்து காவலர்களை நிறுத்த வேண்டுகிறேன்.

ஸ்ரீராம், உடன்குடி.

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தென்காசி-அம்பை சாலையில் கடையம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே இருந்து கடையம் மாட்டுச்சந்தை அருகில் வரை சாலையோரம் வாறுகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், இந்த பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதற்கான ஒரு அறிவிப்பு பலகையைும் வைக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து கடையத்தை சேர்ந்த திருக்குமரன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது.

இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகரிகள் தற்போது, அறிவிப்பு பலகை வைத்து உள்ளனர். எனவே, கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

வேகத்தடை வேண்டும்

கடையம்-ஆலங்குளம் செல்லும் சாலையில் வள்ளியம்மாள்புரம் பிள்ளையார் கோவில் அருகில் முச்சந்தி உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. ஆனால் வேகத்தடை எதுவும் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

அன்பழகன், வள்ளியம்மாள்புரம்.

குடிநீர் குழாயை சூழ்ந்த கழிவுநீர்

சங்கரன்கோவில் களப்பாகுளம் பாரதிநகர் பகுதியில் இரும்பு குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாயானது, கழிவுநீர் ஓடை வழியாக செல்வதால் குழாயை சூழ்ந்து கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

குமார், பாரதிநகர்.

ஆபத்தான மின்கம்பம்

கடையநல்லூர் தாலுகா அய்யாபுரம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் அருகில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மனோகராஜ், அய்யாபுரம்.

சாலை சீரமைக்கப்படுமா?

கடையம் ஒன்றியம் ரவணசமுத்திரத்தில் இருந்து மீனாட்சிபுரம் வழியாக சம்பன்குளம் வரை செல்லும் சாலை மிகவும் மோசமாக கிடக்கிறது. தற்போது பெய்த மழையால் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அசன் மைதீன், சம்பன்குளம்.


Next Story