தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
செடிகள் அகற்றப்பட்டது
மணவாளக்குறிச்சி சந்திப்பில் பி.எஸ்.என்.எல். இணைப்பு பெட்டி உள்ளது. இதனை சரியாக பராமரிக்காததால் சுற்றிலும் செடிகள் வளர்ந்து புதர்களாக மாறி வந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செடிகளை அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சாலையில் தேங்கும் மழைநீர்
குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட பீச் ரோடு மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, சாலையை சீரமைத்து, மழை நீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபுதய்ரு, குளச்சல்.
தெருவிளக்கு வேண்டும்
திக்கணங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட சைபன் முதல் நங்கச்சிவிளை செல்லும் சாலையில் தெருவிளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரங்களில் அந்த பகுதி மிகவும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். மேலும், சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் அந்த பகுதியை ஆய்வு செய்து தேவையான இடங்களில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
-சந்திரமவுலி, திக்கணங்கோடு.
சாலையோரம் ஆபத்து
நாகர்கோவிலில் கோட்டார் சந்திப்பில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் வழியில் சாலையோரம் மிகவும் ஆபத்தான நிலையில் பள்ளம் உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்கின்றனர். சாலையோரம் பள்ளம் இருப்பதால் பொதுமக்கள் தவறி விழுந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சேவியர், நாகர்கோவில்.
கோவில் சுவரில் வளரும் மரம்
திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின்பு கோவில் பராமரிப்பு பணிகள் சரிவர நடைபெறவில்லை. இதனால், கோவில் காம்பவுண்டு சுவரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பறவைகளின் எச்சத்தால் அரச விதைகள் முளைத்து மரமாக வேகமாக வளர்ந்து வருகிறது. சுவர்களில் சேதம் ஏற்பட்டு இடியும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, மரக்கன்றுகளை அப்புறப்படுத்தி சுவர்களை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-லட்சுமி, திருவட்டார்.
பஸ் சரியாக இயக்கப்படுமா?
நாகர்கோவிலில் இருந்து செட்டிகுளம், பீச்ரோடு, என்.ஜி.ஓ.காலனி வழியாக மணக்குடிக்கு 36பி பஸ் செல்வது வழக்கம். தற்போது இந்த பஸ் மாலையில் இயக்கப்படுவதில்லை. இதனால், இந்த பஸ்சை நம்பியிருந்த புத்தளம், வல்லன்குமாரன்விளை போன்ற பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக புத்தளத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் சேதுபதியூருக்கு நடந்து செல்கிறார்கள். எனவே, மாணவர்கள் நலன்கருதி இந்த பஸ்சை மாலை நேரங்களில் முறையாக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நிர்மலா, புத்தளம்.