'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

தினத்தந்திக்கு நன்றி

கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மின்கம்பம் பழுதடைந்து காணப்பட்டது. இதுகுறித்து தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து சேதமடைந்த மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் நடப்பட்டுள்ளது. இதற்காக மின்வாரிய அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

-லட்சுமணன், கன்னிவாடி.

சாய்ந்த மின்கம்பம்

திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலை அருகே கருப்பையாகுடிசை பகுதியில் மின்கம்பம் சாய்ந்து 15 நாட்களுக்கு மேலாகி விட்டது. இதுவரை மின்கம்பத்தை சரிசெய்யவில்லை. மழைக்காலமாக இருப்பதால் மின்வாரிய அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, பெரும்பாறை

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

திண்டுக்கல்லில் இருந்து நிலக்கோட்டைக்கு குறைவான அரசு டவுன் பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் விவசாயிகள், மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் அவதிப்படுகின்றனர். பொதுமக்களின் சிரமத்தை போக்குவதற்கு கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அன்பழகன், நிலக்கோட்டை

ஓடை ஆக்கிரமிப்பு

உத்தமபாளையத்தில் கோர்ட்டு அருகே உள்ள ஓடை ஆக்கிரமிப்பால் நாளுக்குநாள் குறுகி கொண்டே இருக்கிறது. மழைக்காலத்தில் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

-அபினேஷ்வரன், உத்தமபாளையம்.

எரியாத தெருவிளக்கு

ஆயக்குடி பேரூராட்சி குறிஞ்சிநகரில் கடந்த சில நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கிவிடுவதால் பெண்கள் வெளியே நடமாடவே பயப்படுகின்றனர். இந்த தெருவிளக்குகளை சரிசெய்து எரிய வைக்க வேண்டும்.

-பொதுமக்கள், குறிஞ்சிநகர்.

குண்டும், குழியுமான சாலை

தேனி கம்பம் மெட்டு சாலை ஆங்காங்கே சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் பெரும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-அய்யனார், கோம்பை.

சேதம் அடைந்த மின்கம்பம்

தேனி ஒன்றியம் ஜங்கால்பட்டி ஊராட்சி சோலைதேவன்பட்டியில் ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து விட்டது. மேலும் அந்த மின்கம்பத்தில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளதால், பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நடவேண்டும்.

-ராமர், தேனி.

குப்பைகளை அகற்ற வேண்டும்

தேனி கே.ஆர்.ஆர்.நகர் 8-வது தெருவில் குப்பைகள், மழைநீர் தேங்கும் வகையில் ஓடுகள் கிடக்கின்றன. அதில் தேங்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சலை பரப்பும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகள், ஓடுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

-நாகராஜ், தேனி.

அரசு பஸ் நிறுத்தம்

தேனியில் இருந்து வருசநாடு வழியாக சிங்கராஜபுரத்துக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் கடந்த சில மாதங்களாக வருவதில்லை. தேனியில் வரும் பஸ்கள் வருசநாடு வரை மட்டும் இயக்கப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே சிங்கராஜபுரம் வரை அரசு பஸ்களை மீண்டும் இயக்க அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், சிங்கராஜபுரம்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 8-வது தெருவில் இருந்து வி.ஐ.பி.நகருக்கு திரும்பும் இடத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அதில் கழிவுகளும் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குப்பைகளை அகற்ற வேண்டும்.

-பொதுமக்கள், ஆர்.எம்.காலனி.

------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story