'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

குண்டும், குழியுமான சாலை

திண்டுக்கல் அருகே ராமராஜபுரத்தில் இருந்து தலையாரிபட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெரால்டு, வக்கம்பட்டி.

நெரிசலுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்

திண்டுக்கல் காந்திமார்க்கெட் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் எப்போதும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே காந்தி மார்க்கெட்டில் நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?

-பொதுமக்கள், திண்டுக்கல்.

சாக்கடை கால்வாயில் அடைப்பு

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியில் உள்ள ராமர் கோவில் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கால்வாயை சுற்றிலும் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கும் நிலை உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திக், ஜி.கல்லுப்பட்டி.

சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பை

போடி திருமலாபுரத்தில் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை ஓரத்தில் குப்பைகளை சிலர் கொட்டி செல்கின்றனர். இதனால் அங்கு குப்பைகள் குவிந்து, துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே குப்பை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சாலையில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற வேண்டும்.

-ஜேக்கப், திருமலாபுரம்.

சேறும், சகதியுமான சாலை

ஆண்டிப்பட்டி சீனிவாசநகரில் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள மண்பாதை மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே சீனிவாசநகர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தவசிலிங்கம், ஆண்டிப்பட்டி.

பூட்டிக்கிடக்கும் அம்மா உணவகம்

தேனி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகம் பல மாதங்களாக பூட்டிக்கிடக்கிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்கள் அதிக விலை கொடுத்து, தனியார் ஓட்டல், கடைகளில் உணவு வாங்கும் நிலை உள்ளது. எனவே மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஸ்வநாதன், பொம்மிநாயக்கன்பட்டி.

மூடப்படாத பள்ளங்களால் அபாயம்

போடியை அடுத்த தர்மத்துபட்டியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையோரம் குழிகள் தோண்டப்பட்டன. ஆனால் அந்த குழிகள் சரியாக மூடப்படாமல் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் மக்களுக்கு இந்த குழிகள் அபாயகரமாக உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக மழை காரணமாக குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு தோண்டப்பட்ட குழிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுருளி, மேலச்சொக்கநாதபுரம்.

மழைக்கு தாக்குப்பிடிக்காத சாலை

வடமதுரை அருகே காணப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மண்டையகவுண்டனூரில் இருந்து சிங்காரகோட்டைக்கு செல்லும் பாதையில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதன்படி, கற்கள் போடப்பட்டு மண்பாதையாக முதலில் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் சமீபத்தில் பெய்த மழையால் அந்த சாலை தாக்குப்பிடிக்காமல் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. எனவே தார்சாலையை தரமாக அமைக்க வேண்டும்.

-பொதுமக்கள், காணப்பாடி.

போக்குவரத்து நெரிசலால் அவதி

திண்டுக்கல் நாகல்நகரில் இருந்து வேடப்பட்டி செல்லும் சாலையில் ஒத்தக்கண் பாலத்தில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அத்துடன் காலை, மாலை நேரங்களில் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே ஒத்தக்கண் பாலத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

-கோபிநாதன், வேடப்பட்டி.

வேகத்தடை அமைக்கப்படுமா?

திண்டுக்கல் நத்தம் சாலையில், மாலப்பட்டி பிரிவு பகுதியில் வேகத்தடை இல்லாததால், வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. எனவே நத்தம் சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

-வாகன ஓட்டிகள், திண்டுக்கல்.

-------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story