'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

நெல்லை மாவட்டம் அம்பை மற்றும் பாபநாசத்தில் இருந்து பத்தமடை வழியாக நெல்லைக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இதில் காலை 7 மணிமுதல் 9 மணிவரை குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் அந்த பஸ்களில் பயணிகள் வாசலில் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள். எனவே, மேலே குறிப்பிட்ட நேரத்தில் கூடுதலாக பஸ்களை இயக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மாரிசண்முகம், மேலச்செவல்.

எச்சரிக்கை பலகை வேண்டும்

திசையன்விளை தாலுகா பெட்டைகுளம் வழியாக ஆத்தங்கரைபள்ளிவாசல் செல்லும் சாலையில் பெருங்குளம் ஊரில் அபாயகரமான வளைவு உள்ளது. இந்த வளைவு பகுதியில் எச்சரிக்கை பலகை, சிக்னல் கம்பங்கள் எதுவும் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, அந்த பகுதியில் எச்சரிக்கை பலகை அல்லது சிக்னல் கம்பங்கள் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

சுடலைமணி, ரம்மதபுரம்.

வாகன ஓட்டிகள் அவதி

திசையன்விளை-நவ்வலடி சாலையில் கரைச்சுத்துபுதூர் ஊராட்சி ராஜம்மாள்புரம் அருகே உள்ள மரங்களின் கிளைகள் சாலையோரம் வளர்ந்து இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். ஆகவே, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரங்களின் கிளைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

பயன்பாடு இல்லாத அடிபம்பு

திடியூர் ஊராட்சி ஒன்றியம் இளையாமுத்தூர் கிராமத்தில் அடிபம்பு பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. மக்களின் தாகம் தீர்த்த இந்த அடிபம்பை சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

பாலசுப்பிரமணியன், வடக்கு இளையாமுத்தூர்.

பாலூட்டும் அறை சீரமைக்கப்படுமா?

திசையன்விளை பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைந்து உள்ளது. இந்த அறையானது தற்போது கதவுகள் பழுதடைந்தும், இருக்கைகள் சேதம் அடைந்தும் காணப்படுகிறது. இதனால் தாய்மார்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த அறையை சீரமைக்க வேண்டுகிறேன்.

ஆல்பர்ட், திசையன்விளை.

குண்டும், குழியுமான சாலை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் பூச்சிக்காடு விலக்கு முதல் கீழ நாலுமாவடி செல்லும் தேரிப்பகுதியில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கூடங்களுக்கு சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள் இந்த சாலையில் மட்டும் சைக்கிளில் இருந்து இறங்கி நடந்து செல்கிறார்கள். ஆகவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

சிவகணேஷ்பதி, உடன்குடி.

ஆபத்தான மின்கம்பம்

கோவில்பட்டி ராஜீவ்நகர் இ.பி. காலனியில் உள்ள மின்கம்பத்தின் மேல் பகுதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் இந்த ஆபத்தான மின்கம்பத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

பாலமுருகன், கோவில்பட்டி.

* திருச்செந்தூர் சன்னதி தெரு, நாடார் தெரு பிரிவும் சந்து முகப்பில் உள்ள மின்கம்பம் மிகவும் தரைதளத்தில் எந்தவிதமான பிடியும் இல்லாமல் அடிப்பகுதி அரித்த நிலையில் ஆபத்தான நிலையில் இருக்கிறது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருக்கிறது. ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் இந்த மின்கம்பத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மோகனசுந்தரம், திருச்செந்தூர்.

நாய்கள் தொல்லை

தெற்கு கழுகுமலை கிராமத்தில் நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. கிராமத்தில் சுற்றித்திரியும் ஆடுகளை கடிக்கின்றது. பொதுமக்கள் நடந்து சென்றாலும் துரத்துகிறது. எனவே, கிராமத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

சப்பாணிராஜ், தெற்கு கழுகுமலை.

போக்குவரத்திற்கு இடையூறு

உடன்குடியில் இருந்து பரமன்குறிச்சி செல்லும் மெயின் ரோட்டில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் படுத்து கிடக்கிறது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. எனவே, சாலையில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

சரவணன், உடன்குடி.

பொதுமக்கள் அவதி

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் சேர்ந்தமரம் கிராமத்தில் சேகரிப்பப்படும் குப்பைகள் சேர்ந்தமரம் மற்றும் ஆண்டிநாடாரூர் மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டில் கொட்டப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே குப்பைகளை வேறு இடத்தில் கொட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காளிராஜ், ஆண்டிநாடாரூர்.

பழுதடைந்த மின்கம்பம்

சுரண்டை அருகே இரட்டைகுளம் சந்தனமாரியம்மன் கோவில் கீழ்புறத்தில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் இந்த மின்கம்பத்தை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மனோகர், இரட்ைடகுளம்.

சுகாதார வளாகம் செயல்படுத்தப்படுமா?

ஆய்க்குடி அருகே உள்ள விந்தன்கோட்டை ஊருக்கு கீழ்பகுதியில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது. அந்த பகுதி மக்கள் அதை பயன்படுத்த முடியாமல் உள்ளனர். மேலும் அந்த சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் வசதியும் இல்லை. எனவே தண்ணீர் வசதி ஏற்படுத்தி, பூட்டி கிடக்கும் சுகாதார வளாகத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுகிறேன்.

ராமச்சந்திரன், சுந்தரபாண்டியபுரம்.

வேகத்தடை வேண்டும்

கடையம் அருகே திருமலையப்பபுரம், பொட்டல்புதூர் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களின் அருகில் இருந்த வேகத்தடைகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. எனவே மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி அந்த பகுதிகளில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அம்ஜத், முதலியார்பட்டி.

சாலையோரம் கிடக்கும் குப்பைகள்

பாவூர்சத்திரத்தில் கடையம் செல்லும் சாலையில் அந்த பகுதி வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இதுதொடர்பாக பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

முருகேசன், பாவூர்சத்திரம்.


Next Story