'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி'க்கு நன்றி

தேனி அருகே வடபுதுப்பட்டியில் இருந்து மதுராபுரி செல்லும் சாலையில் மண் படிந்து விபத்து ஏற்படும் வகையில் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வடபுதுப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் சாலையில் பரவி கிடந்த மண்ணை அகற்றினர். பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்திய 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்துக்கும் நன்றி.

-பொதுமக்கள், வடபுதுப்பட்டி.

வீடுகளை சுற்றி தேங்கும் கழிவுநீர்

பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி 1-வது வார்டு நேசமணி தெருவில் வீடுகளை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அவற்றில் கொசுப்புழுக்கள் உருவாவதால் இரவில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்.

-ஜான், பாலகிருஷ்ணாபுரம்.

குண்டும், குழியுமான சாலை

தேனி கே.ஆர்.ஆர்.நகர் வழியாக புது பஸ் நிலையம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், தேனி.

சாலையோர பள்ளத்தால் விபத்து

பழனி பஸ் நிலையம் அருகில் குளத்துரோட்டில் உள்ள பாலத்தின் சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலை ஒருவழிப்பாதையாக மாறியுள்ளது. மேலும் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.

-பொதுமக்கள், பழனி.

பயணிகள் நிழற்குடை வேண்டும்

செம்பட்டியை அடுத்த சித்தையன்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகில் மற்றும் பிற பஸ் நிறுத்த பகுதிகளில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் மழையிலும் வெயிலிலும் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இமயதுல்லா, சித்தையன்கோட்டை.

பள்ளி கட்டிடம் சேதம்

வேடசந்தூர் தாலுகா விருதலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் சேதமடைந்து வருகிறது. கட்டிடத்தின் முன்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகிறது. இதே நிலை நீடித்தால் எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

-கணேசன், விருதலைப்பட்டி.

புதர்மண்டி கிடக்கும் நிழற்குடை

உப்புக்கோட்டை அருகே மாணிக்காபுரத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை அருகில் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே நிழற்குடையை சுற்றி வளர்ந்துள்ள செடி-கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர்மக்கள், மாணிக்காபுரம்.

சாலையில் பரவி கிடக்கும் மணல்

கடமலைக்குண்டுவில் டாஸ்மாக் கடை எதிரே உள்ள குமணன்தொழு சாலையில் மணல் பரவி கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் அந்த வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையில் பரவி கிடக்கும் மணலை அப்புறப்படுத்த வேண்டும்.-முருகன், கடமலைக்குண்டு.

சேதமடைந்து வரும் மேல்நிலை குடிநீர் தொட்டி

திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்துவில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்து வருகிறது. தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் தொட்டி எந்தநேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்.

-மாரியப்பன், தோட்டனூத்து.

அறிவிப்பு பலகை சேதம்

உத்தமபாளையத்தில் இருந்து கோகிலாபுரம் செல்லும் சாலையில் 'சுருளி அருவிக்கு செல்லும் பாதை' என்ற வாசகத்துடன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு பலகை தற்போது சேதமடைந்து உள்ளது. இதனால் சுருளி அருவிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அறிவிப்பு பலகையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரத்தினம், உத்தமபாளையம்.

கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணி

கூடலூர் 21-வது வார்டு லோயரகேம்ப் காலனி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் அந்த பணி முழுமையடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட சாக்கடை கால்வாய் பணியை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேல், கூடலூர்.

------------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

----------------------


Next Story