'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

தெருவில் ஓடும் கழிவுநீர்

திண்டுக்கல் ஒன்றியம் தோட்டனூத்து ஊராட்சி நல்லமநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் சாலை, சாக்கடை வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் செல்கிறது. மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும்.

-முருகன், நல்லமநாயக்கன்பட்டி.

சாலையில் பரவி கிடக்கும் மண்

தேனி மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே ஆயுதப்படை போலீஸ் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் மண் பரவி கிடக்கிறது. இதனால் சாலையில் இருக்கும் வேகத்தடைகள் கூட தெரியாமல், இருசக்கர வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே சாலையில் கிடக்கும் மண்ணை அகற்ற வேண்டும்.

-விக்னேஷ், தேனி.

ரேஷன் கடையில் சேமியா கட்டாயம்

உத்தமபாளையத்தில் உள்ள ஒரு சில ரேஷன்கடைகளில் ரேஷன்பொருட்கள் வாங்கும் போது சேமியா, கடலை கட்டாயம் வாங்கும்படி வற்புறுத்துகின்றனர். இதனால் பொதுமக்களுக்கும், விற்பனையாளருக்கும் தேவையற்ற சச்சரவுகள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்கள் விரும்பும் பொருட்களை மட்டும் வழங்க அறிவுறுத்த வேண்டும்.

-பக்ருதீன், உத்தமபாளையம்.

பயன்படாத குடிநீர் தொட்டி

பெரியகுளம் தாலுகா ஜி.கல்லுப்பட்டி 9-வது வார்டு நடுத்தெருவில் மல்லையசாமி கோவில் முன்பு உள்ள குடிநீர் தொட்டி பயன்பாட்டில் இல்லை. அதேநேரம் மக்கள் குடிநீருக்காக பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பொதுமக்களின் சிரமத்தை போக்குவதற்கு குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

-கார்த்திக், ஜி.கல்லுப்பட்டி.

குண்டும், குழியுமான சாலை

திண்டுக்கல் வேடப்பட்டி ஒத்தக்கண் பாலம் பகுதியில் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-மூர்த்தி, வேடப்பட்டி.

சேதம் அடைந்த மின்கம்பம்

திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி ராஜீவ்காந்திநகரில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து விட்டது. சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து விழுவதால் பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் மக்கள் வசிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

-ஓம்பிரகாஷ், தாமரைப்பாடி.

கால்வாய் ஆக்கிரமிப்பு

சாணார்பட்டி ஒன்றியம் கணவாய்பட்டியில் குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாய் ஆக்கிரமிப்பால் குறுகி கொண்டே இருக்கிறது. இதனால் மழைக்காலத்தில் குளத்துக்கு தேவையான அளவு தண்ணீர் வராமல் போகும் வாய்ப்பு உள்ளது எனவே கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

-பொதுமக்கள், கணவாய்பட்டி.

சாலையை அகலப்படுத்தும் பணி

திண்டுக்கல் ரவுண்டுரோட்டில் இருந்து திருச்சி சாலை வரையுள்ள ஜி.டி.என். சாலையை அகலப்படுத்தும் பணி மந்தமாக நடக்கிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே சாலை அகலப்படுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.

-கணேசன், திண்டுக்கல்.

செடி, கொடிகள் ஆக்கிரமிப்பு

கடமலைக்குண்டு முதல் அண்ணாநகர் விலக்கு வரையிலான 8 கிலோ மீட்டர் சாலையில் பல்வேறு இடங்களில் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். சாலையை ஆக்கிரமித்த செடி, கொடிகள் அகற்றப்படுமா?

-பொதுமக்கள், கடமலைக்குண்டு.

போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

உப்புக்கோட்டை அருகே தப்புகுண்டு விலக்கு பகுதியில் இருந்து தர்மாபுரி செல்லும் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-திருமலை, தர்மாபுரி

------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story