தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

சாலையின் அவலநிலை

அருவிக்கரை ஊராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலம் மற்றும் வேர்கிளம்பி இணைப்பு சாலை சேதமடைந்து உள்ள அவலநிலையை தான் படத்தில் பார்க்கிறீர்கள். இந்த சாலை பரளியாறு மற்றும் மாத்தூர் தொட்டிப் பாலம் செல்லும் சாலை ஆகும், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை சேதமடைந்து ஒரு ஆண்டு ஆகியும் சரி செய்யாததால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுபாஷ், மாத்தூர்.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

நாகர்கோவில் வடசேரியில் அண்ணா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்துக்கு தினமும் காலையும், மாலையும் ஏராளமானவர்கள் விளையாட வருகிறார்கள். ஆனால் அண்ணா விளையாட்டு அரங்கம் உள்ள பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் இந்த சாலை வழியாக நடந்து செல்ல முடியவில்லை. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், வடசேரி.

வீணாகும் குடிநீர்

கருங்கலில் இருந்து திங்கள்நகர் செல்லும் சாலையில் கருக்குபனை ஜங்ஷன் அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து குழாயில் இருந்து குடிநீர் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. யாருக்கும் பயன்படாமல் தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுனில்குமார், கருங்கல்.

மின்கம்பத்தால் ஆபத்து

அஞ்சுகிராமம் போலீஸ் நிலையம் அருகே மெயின் ரோட்டில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அந்த இடத்தில் இருந்த மின்கம்பம் சேதம் அடைந்து இருந்தது. சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அகற்றப்பட்ட மின்கம்பத்தை அங்கேயே போட்டு விட்டனர். மேலும் கழிவுநீர் வால்வாயும் திறந்த நிலையில் உள்ளதால், இரவு நேரத்தில் நடைபாதை என நினைத்து அதில் வருபவர்கள் விபத்தில் சிக்கி கழிவுநீர் கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. எனவே பழைய மின்கம்பத்தை அப்புறப்படுத்தி, கழிவுநீர் கால்வாய் மீது சிமெண்டு பலகை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காந்திராஜ், லட்சுமிபுரம்.

கேபிள் அகற்றப்படுமா?

மார்த்தாண்டம்-தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் அழகியமண்டம் பஸ் நிறுத்தத்தில் ஒரு பயணிகள் நிழலகம் உள்ளது. அந்த நிழலகத்தின் முன் உள்ள மின் கம்பத்தில் வீடுகளில் தொலைக்காட்சி இணைப்பு வழங்கும் கேபிள்கள் அதிக அளவில் கட்டி தொங்க விடப்பட்டுள்ளன. இது இந்த நிழலத்தில் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. சில நேரங்களில் வேகமாக ஓடி பஸ்சில் ஏறும் பயணிகள் இந்த கேபிள்களில் சிக்கி கீழே விழும் நிலையும் இருக்கிறது. தமிழகத்தில் மின் கம்பங்களை வேறு எந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. இந்த நிலையில் விதிகளுக்கு புறம்பாக இந்த மின் கம்பத்தில் கேபிள்கள் கட்டி வைக்கப்பட்டுள்ளன. எனவே பயணிகளின் நலன் கருதி இந்த கேபிள்களை உடனே அகற்ற மின் வாரியம் முன்வர வேண்டும்.

-தேவதாஸ், அழகியமண்டபம்.

விபத்து அபாயம்

தக்கலை - குலசேகரம் சாலையில் சரல்விளை பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது சாலையோரம் நின்ற மாமரத்தை விட்டு விட்டனர். அது தற்போது போக்குவரத்திற்கு இடையூறாக காணப்படுகிறது. இரவு நேரத்தில் மரத்தில் வாகனங்கள் மோதி விபத்து நடக்காமல் இருக்க வலதுபுறம் திரும்பும் போது எதிரே வரும் வாகனங்களில் மோதுகின்ற சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது எனவே பெரிய விபத்து நடப்பதற்கு முன் மரத்தை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேகர், சரல்விளை.


Next Story