'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

புகாருக்கு உடனடி தீர்வு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காமராஜர் தெருவில் உள்ள 3-வது மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக, உடன்குடியை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தியாக பிரசுரமானது. இதற்கு உடனடி தீர்வாக அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் அமைத்து உள்ளனர்.

மேம்பாலம் அமைக்கப்படுமா?

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து நவ்வலடி செல்லும் சாலையில் சிறிது தொலைவில் சாலையின் குறுக்கே நீரோடை செல்கிறது. ஆனால் மழை காலங்களில் தண்ணீர் அதிகளவில் செல்லும்போது, அந்த வழியாக ஆட்களோ, வாகனங்களோ செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, அங்கு மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- அந்தோணிபிச்சை, தோப்புவிளை.

வேகத்தடை தேவை

நெல்லை ராமையன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சுவாமி விவேகானந்தா தொடக்கப்பள்ளி, 2 ரேஷன் கடைகள், கிராம நிர்வாக அலுவலகம், அங்கன்வாடி மையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதனால் குழந்தைகள், முதியவர்கள், பொதுமக்கள் என்று அங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் செல்லும் வழியில் மெயின் ரோட்டில் வேகத்தடை இல்லாததால் சாலையை கடக்க குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.

- சிவகுமார், ராமையன்பட்டி.

குளத்தில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு

பேட்டை முள்ளிகுளத்தில் ஆகாயத்தாமரை அதிகளவில் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளன. மேலும் குப்பைகள் கொட்டப்பட்டு, குப்பைமேடாக காட்சி அளிப்பதுடன் கழிவுநீரும் சென்று கலக்கிறது. ஆகையால் குளத்தை தூர்வாருவதுடன் அந்த பகுதியில் குப்பை தொட்டி வைத்து குப்பைகளை முறையாக அகற்ற வேண்டுகிறேன்.

- ஸ்ரீதர், கோடீஸ்வரன்நகர்.

காத்திருக்கும் நோயாளிகள்

சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சரியான நேரத்துக்கு வருவது இல்லை. இதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த குறையை போக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- முப்புடாதி முத்து, சேரன்மாதேவி.

சாலை மோசம்

ராதாபுரம் தாலுகா ஊரல்வாய்மொழி ஊருக்குள் செல்லும் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது. மேலும் அதில் தண்ணீர் தேங்கி கிடப்பதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

பயணிகள் நிழற்கூடம் தேவை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம்-கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இருந்தது. சாலை விரிவாக்க பணியின்போது, அந்த நிழற்கூடம் அகற்றப்பட்டது. அதன்பிறகு மீண்டும் அமைக்காததால், பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகவே, அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- முதலாளிச்சாமி, கான்சாபுரம்.

மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. அங்கு கடற்கரை பகுதியில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். மின்விளக்குகள் அமைக்காததால் அங்கு இரவு நேரத்தில் புனித நீராட செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பக்தர்கள் நலன் கருதி மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

- ராஜேஷ், குலசேகரன்பட்டினம்.

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

தூத்துக்குடி அருகே உள்ள சங்கரப்பேரியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்து உள்ளது. இந்த பகுதியில் உள்ள மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பிகள் அறுந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை உடனடியாக சரிசெய்ய வேண்டுகிறேன்.

- பாலா, தூத்துக்குடி.

கூடுதல் ஊழியர் நியமிக்க வேண்டும்

ஓட்டப்பிடாரம் தாலுகா பசுவந்தனை ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் முன்பு 2 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால் தற்போது ஒரு ஊழியர் மட்டுமே உள்ளதால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, கூடுதல் ஊழியரை நியமிக்க அதிகாரிகள் ஏற்பாடு செயய வேண்டும்.

- முத்துகணேஷ், பசுவந்தனை.

குண்டும் குழியுமான சாலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கே.வி.முத்துசாமிபுரத்தில் இருந்து பொய்கைமேடு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

- விஷால், பெரியசாமிபுரம்.

ஆபத்தான மின்கம்பம்

கடையம் அருகே உள்ள திருமலையப்பபுரம் விலக்கில் இருந்து ரவணசமுத்திரம் செல்லும் சாலையில் சுடலைமாடன் கோவில் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்பாக, ஆபத்தான அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

- திருக்குமரன், கடையம்.

ஏ.டி.எம். வசதி தேவை

புளியங்குடி நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏ.டி.எம். மையம் இல்லை. இதனால் அங்கு வருபவர்களும், அந்த பகுதி மக்களும் அவசர தேவைக்கு பணம் எடுக்க வேண்டுமானால், சுமார் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மெயின் ரோட்டுக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆகவே நகராட்சி அலுவலகம் அருகில் ஏ.டி.எம். மையம் அமைத்தால் பொதுமக்கள் பெரிதும் பயன் அடைவர்.

- செல்லத்துரை, புளியங்குடி.

ரவுண்டானா அமைக்கப்படுமா?

சங்கரன்கோவில் பகுதியில் புளியங்குடி மற்றும் சுரண்டை சாலை பிரியும் இடம், 3 சாலைகள் சந்திக்கும் பகுதியாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் 2 உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன. அந்த பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு ரவுண்டானா அமைக்கவோ அல்லது வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அமைக்கவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

- மகாலிங்கம், சங்கரன்கோவில்.

நாய்கள் தொல்லை

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கலில் காமராஜர்நகர், கோகுல்நகர், பசும்ெபான்நகர், அம்பேத்கர்நகர் போன்ற பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்கள் கடிக்க வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். எனவே, நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.எஸ்.கணேசன், கீழக்கலங்கல்.


Next Story