'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

குடிநீர் குழாய் உடைப்பு

கடமலைக்குண்டு அருகே மயிலாடும்பாறையில் இருந்து பொன்னன்படுகை செல்லும் சாலையில் குடிநீர் குழாய் உடைந்துவிட்டது. அதில் இருந்து வெளியேறும் குடிநீர் ஓடை போன்று செல்கிறது. மேலும் குடிநீர் சென்றதில் சாலையும் சேதம் அடைந்துவிட்டது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து, சாலையை சீரமைக்க வேண்டும்.

-முருகன், மயிலாடும்பாறை.

சேதம் அடைந்த மின்கம்பம்

உப்புக்கோட்டை அரசு கள்ளர் பள்ளி தெருவில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்துவிட்டது. பலத்த காற்று, மழையின் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் மக்கள் வசிக்கின்றனர். எனவே சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிய மின்கம்பம் நடவேண்டும்.

-அசோகன், உப்புக்கோட்டை.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

பெரியகுளம் பஸ்நிலைய பகுதியில் சாலையில் மாடுகள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிகின்றன. அந்த மாடுகள் திடீரென சாலையின் குறுக்காக ஓடுவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இதனால் மனிதர்கள் மட்டுமின்றி மாடுகளும் காயம் அடைகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகள் திரிவதை தடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், பெரியகுளம்.

அபாய மின்கம்பம் மாற்றப்படுமா?

கம்பம் நகரில் உள்ள ஒரு மின்கம்பத்தின் நடுப்பகுதியில் 3 இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன்கருதி அபாய மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யனார், கம்பம்.

போக்குவரத்துக்கு இடையூறு

பெரியகுளம் நகரில் சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது. அதை பொருட்படுத்தாமல் தேனி செல்லும் சாலையின் இருபக்கங்களிலும் சிலர் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலையில் இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

-குமார், பெரியகுளம்.

வீணாகும் குடிநீர்

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சி பொம்மநல்லூர் ஆதிதிராவிடர் காலனியில் குடிநீர் குழாய் திருகு சேதம் அடைந்து விட்டது. இதனால் குடிநீர் வினியோகம் செய்யப்படும் போது, குடிநீர் வீணாக செல்கிறது. எனவே குடிநீர் வீணாவதை தடுக்க குழாய் திருகு பொருத்த வேண்டும்.

-ரெங்கசாமி, பொம்மநல்லூர்.

சாலை சீரமைப்பு அவசியம்

தாண்டிக்குடியில் பாலமுருகன் கோவிலுக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பக்தர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-ஜெரால்டு, வக்கம்பட்டி.

எரியாத தெருவிளக்குகள்

ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டை ஊராட்சி பிரவான்பட்டியில் ஒருசில தெருவிளக்குகள் எரியவில்லை. இரவில் அந்த பகுதிகள் இருளில் மூழ்கி விடுவதால் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகளை சரிசெய்து எரிய வைக்க வேண்டும்.

-ரமேஷ்குமார், பிரவான்பட்டி.

சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்

கொடைக்கானல் தாலுகாவில் பூம்பாறை, பூண்டி, மன்னவனூர், கூக்கால் ஆகிய கிராமங்களுக்கு போதிய அளவில் பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், விவசாய தொழிலாளர்கள் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இந்த ஆபத்தான பயணத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க, கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

-ராஜேந்திரன், கொடைக்கானல்.

பயணிகள் அவதி

வத்தலக்குண்டுவில் ஒருசில அரசு பஸ்களில் பயணிகளை ஏற்றி கொண்டு, பணிமனைக்கு சென்று டீசல் நிரப்புகின்றனர். இதனால் பயண நேரம் தாமதமாகி பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சவுந்தரராஜன், வத்தலக்குண்டு.

------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story