'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 30 Sep 2022 6:45 PM GMT (Updated: 30 Sep 2022 6:46 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

புகார் பெட்டி செய்தி எதிெராலி

நெல்லை வி.எம்.சத்திரம் எம்.என்.அப்துல்ரகுமான் முதலாளிநகரில் 3-வது மெயின் ரோட்டில் உள்ள மின்கம்பம் சேதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக, நெல்லையை சேர்ந்த பாலகிருஷ்ணன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

குடிநீர் குழாயில் உடைப்பு

நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி மெயின் பஜார் ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 15 நாட்களாக தண்ணீர் வீணாக செல்கிறது. ஆகையால் குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- மாரிமுத்து, பெருமாள்நகர்.

* திசையன்விளை அருகே உள்ள நவ்வலடி சந்திப்பில், கன்னியாகுமரி-திருச்செந்தூர் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சாலை சேதம் அடைவதுடன், சாக்கடை போல் மாறி துர்நாற்றம் வீசுகிறது. ஆகவே, குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டுகிறேன்.

- ஆறுமுகநயினார், திசையன்விளை.

டாக்டர் நியமிக்க வேண்டும்

மேலப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில், எலும்பு சம்பந்தப்பட்ட சிகிச்சைக்கான டாக்டர் இருந்தார். அவர் 6 மாதங்களுக்கு முன்பு இடமாறுதலாகி சென்றார். அதன்பிறகு புதிதாக டாக்டர் நியமிக்கப்படவில்ைல. இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்படுபவர்களை சிகிச்சைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் நிலை உள்ளது. இந்த குறையை போக்க, டாக்டரை நியமிக்க வேண்டும்.

- சாகுல்ஹமீது, மேலப்பாளையம்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

வீரவநல்லூர் இந்திராநகர் ரோடு பகுதியில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. அந்த பகுதி ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி ஆகும். அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பாக அதிகாரிகள் அந்த மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- இசக்கிதாஸ், வீரவநல்லூர்.

புகாருக்கு உடனடி தீர்வு

தூத்துக்குடி மாவட்டம் ேகாவில்பட்டி புதுகிராமம் செல்லும் மெயின் ரோட்டில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள அடிபம்பு மண்ணில் புதைந்த நிலையில் இருப்பதாகவும், மற்றொரு அடிபம்பு முகப்பு பகுதி உடைந்த நிலையில் இருப்பதால் தண்ணீர் குடத்தில் விழாமல் கீழே விழுவதாகவும், கோவில்பட்டியை சேர்ந்த பாலமுருகன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக அடிபம்புகள் சீரமைக்கப்பட்டு உள்ளன. இதற்கு உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

மேற்கூரை அமைக்கப்படுமா?

நெல்லை-திருச்ெசந்தூர் ரெயில் பாதை மின்மயமாக்கல் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக, நாசரேத் ரெயில் நிலையத்தில் மரங்களை வெட்டியதால், தற்போது 2-வது நடைமேடையில் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று அவதிப்படுகின்றனர். ஆகையால், அங்கு மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

- செல்டன், நாசரேத்.

மோட்டார் மூலம் உறிஞ்சப்படும் தண்ணீர்

ஓட்டப்பிடாரம் தாலுகா முடிவைத்தானேந்தல் ஊராட்சியில் 3 நாட்களுக்கு ஒருமுறை தான் வீடுகளுக்கு தண்ணீர் வருகிறது. அதிலும் சிலர் வீடுகளில் மின்மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுவதால், மற்றவர்களுக்கு தண்ணீர் சரிவர கிடைப்பது இல்லை. இதில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

- சிதம்பரம், முடிவைத்தானேந்தல்.

நோய் பரவும் அபாயம்

எட்டயபுரம் நடுவிற்பட்டி பெரிய தெரு 13-வது வார்டு பகுதியில் வாறுகாலில் மனித கழிவுகளும் சேர்ந்து தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளதால், வாறுகாலை தூர்வாரி சுத்தம் செய்து மனித கழிவுகள் மீண்டும் வராத வகையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- குப்புசாமி, எட்டயபுரம்.

சாலை மோசம்

நாசரேத்தில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக மிகவும் ேமாசமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அந்த சாலைகளை சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து சீரமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- ஜென்சிலின், அறிவான்மொழி.

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா கணக்கப்பிள்ளைவலசையில் 2-வது வார்டு முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்டு பூச்சு பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக, அந்த ஊரை சேர்ந்த கண்ணன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக அந்த மின்கம்பம் சீரமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

சங்கரன்கோவில் பகுதியில் பழைய பஸ் நிலையத்தை இடித்துவிட்டு, புதிய பஸ் நிலையமாக புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்காலிக பஸ் நிலையமாக பெரியார் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த பஸ் நிலையத்தில் இருந்து கழுகுமலை ரோடு வரை சாலையோரம் மின்விளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளது. எனவே, அங்கு மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

- மகாலிங்கம், சங்கரன்கோவில்.

குண்டும் குழியுமான சாலை

கடையம் யூனியன் ஆழ்வார்குறிச்சியில் இருந்து வன்னியப்பர் கோவில் வழியாக பாப்பான்குளம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

வேகத்தடை வேண்டும்

செங்கோட்டை பஸ் நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகம், திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ளது. அந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகனங்கள் வேகமாக வரும்போது அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதை தடுக்க பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் பகுதியிலும், நகராட்சி அலுவலகம் முன்பும் வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

- கனியமுதன், செங்கோட்டை.

இருக்கைகள் அமைக்கப்படுமா?

திருவேங்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் இல்லை. இதனால் பயணிகள் பஸ்சுக்காக கால்கடுக்க காத்து நிற்கும் அவலம் உள்ளது. இதை தவிர்க்க அங்கு இருக்கைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- ஜீவன், திருவேங்கடம்.


Next Story