'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 Oct 2022 6:45 PM GMT (Updated: 1 Oct 2022 6:46 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சி கருவேலன்குளம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி அருகில் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வீணாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே, குழாய் உடைப்பை சரி செய்து, சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-பாக்கியராஜ், களக்காடு.

* பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பிள்ளையார் கோவில் தெரு, சவுராஷ்டிரா தெரு, மணிக்கூண்டு அருகில் ஆகிய 3 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. எனவே, குழாய் உடைப்பை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ராஜகோபால், திம்மராஜபுரம்.

காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

நெல்லை மேலப்பாளையம் 50-வது வார்டு ஆமீன்புரம் 7-வது தெருவில் உள்ள குடிநீர் தொட்டி பல மாதங்களாக பராமரிப்பற்று சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே, காட்சிப்பொருளான குடிநீர் தொட்டியை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மீண்டும் வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-செய்யது அலி பாத்திமா, மேலப்பாளையம்.

பயணிகள் நிழற்கூடம் தேவை

ராதாபுரம் தாலுகா பழவூரை அடுத்த சிதம்பரபுரம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு பயணிகள் வெயிலிலும், மழையிலும் காத்து நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே, அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.

-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

வேகத்தடை அமைக்கப்படுமா?

நெல்லையை அடுத்த பேட்டை- பழைய பேட்டை இடையே இணைப்பு சாலை புதிதாக அமைக்கப்பட்டது. அப்போது வளைவு பகுதி, பள்ளிக்கூடம் அருகில் இருந்த வேகத்தடைகளை அகற்றினர். புதிய சாலை அமைத்த பின்னர் மீண்டும் அங்கு வேகத்தடைகள் அமைக்காததால் வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, புதிய சாலையில் மீண்டும் வேகத்தடைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-மெஹர் அனிஷா, பேட்டை.

திறந்த வாறுகாலால் விபத்து அபாயம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்- நாசரேத் ரோட்டில் வாறுகால் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் வாறுகாலுக்குள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.

-ஹரி கிருஷ்ணன், சாத்தான்குளம்.

பாலம் அமைக்கும் பணி விரைந்து நிறைவேற்றப்படுமா?

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உப்பாற்று ஓடை அருகில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக பாதை குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், அங்கு மின்விளக்குகள் இல்லாததால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றவும், தற்காலிக பாதையை சீரமைத்து மின்விளக்குகள் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-காதர்கனி, முத்தையாபுரம்.

அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் அவசியம்

ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு பயிலும் சில வகுப்பு மாணவிகளை சிறுத்தொண்டநல்லூரில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்து படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் மாணவிகள் அவதியடைகின்றனர். எனவே, ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-பால்கிளிராஜா, ஏரல்.

இருள்சூழ்ந்த சாலை

திருச்செந்தூர் தாலுகா பூச்சிக்காடு விலக்கில் இருந்து கீழ நாலுமாவடி வழியாக வனத்திருப்பதி செல்லும் சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்த சாலையில் பொதுமக்கள் அச்சத்துடனே பயணிக்கின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, அங்கு சாலையோரம் போதிய மின்விளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-சிவகணேஷ்பதி, உடன்குடி.

பன்றிகள் தொல்லை

சாத்தான்குளம் 15-வது வார்டு தோப்புவளம் சாலையில் பன்றிகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இவைகள் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தும் அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் வாகன விபத்துகளும் நிகழுகின்றன. எனவே, பன்றி தொல்லையை கட்டுப்படுத்த அவற்றை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-பேராத்து செல்வம், சாத்தான்குளம்.

தாகம் தீர்க்காத தண்ணீர் தொட்டி

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா செவல்குளம் பஞ்சாயத்து கிழக்கு கோபாலகிருஷ்ணபுரம் காலனியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. சில நாட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த தொட்டி பின்னர் பராமரிப்பின்றி பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனால் தண்ணீர் தொட்டியை சூழ்ந்து சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. எனவே, தாகம் தீர்க்காத தண்ணீர் தொட்டியை சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ஆனந்தகுமார், செவல்குளம்.

தெருவில் தேங்கும் கழிவுநீர்

சங்கரன்கோவில் தாலுகா பந்தப்புளி கிராமம் தெற்கு தெருவில் வாறுகால் வசதி இல்லாததால் கழிவுநீர் தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அங்கு வாறுகால் அமைத்து கழிவுநீரை முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-குருசாமி, பந்தப்புளி.

டாஸ்மாக் கடை இடமாற்றப்படுமா?

ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி கல்யாணிபுரம் 1-வது வார்டு மெயின் ரோட்டில் கோவில் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. அப்பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால், கோவில் வளாகம் மதுபிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே, அங்கு தெருவிளக்குகள் அமைக்கவும், டாஸ்மாக் கடையை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடமாற்றவும் அதிகாரிகள் ஆவன செய்வார்களா?.

-பிரபாகரன், கல்யாணிபுரம்.

விஷ பூச்சிகள் நடமாட்டம்

தென்காசி அருகே குணராமநல்லூரில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் சீமை கருவேல மரங்கள், புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அங்கு விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. எனவே, அங்குள்ள சீமை கருவேல மரங்கள், புதர் செடிகளை அகற்றி, சுத்தமாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-சிவகுமார், மத்தளம்பாறை.

பாலம் அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும்

கடையநல்லூர்- சேர்ந்தமரம் ரோட்டில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கூடத்தின் முன்புள்ள வாறுகால் பாலம் சேதமடைந்ததால், அதனை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, வாறுகால் பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-காளிமுத்து, கடையநல்லூர்.


Next Story