தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

அந்தரத்தில் தொங்கும் விளக்குகள்

இனயம்புத்தன்துறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட இனயம் கடற்கரை கிராமத்தில் அரசு உதவிபெறும் பள்ளியின் அருகில் உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் சேதமடைந்து, கழன்று அந்தரத்தில் தொங்கியபடி காணப்படுகிறது. காற்றின் வேகத்தில் விளக்குகள் அந்த பகுதியில் செல்லும் பாதசாரிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின்விளக்குகள் பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லெனின், இனயம்.

சுகாதார சீர்கேடு

விளாத்துறை ஊராட்சிக்கு உட்பட மாராயபுரம் கருவாதலைவிளை பகுதியில் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அந்த பகுதியில் இருந்து வெளியேறும் மாட்டுக்கழிவுகள் சாலையில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.ஜெயின், மாராயபுரம்.

சீரமைக்க வேண்டிய சாலை

குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட கீழ்பம்மம் முதல் மேல்பம்மம் வரை உள்ள சாலையில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. அதன்பின்பு சாலையை சரியாக சீரமைக்காததால் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-எஸ்.முகம்மது சபீர், குளச்சல்.

ஆபத்தான மின்கம்பம்

தென்தாமரைகுளம் பேரூராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட இலந்தையடிவிளை பூங்கா பக்கத்தில் இருந்து வடக்குபக்கம் பொன்னார்விளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள 2 மின்கம்பங்களின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. அவை எந்த நேரமும் சாய்ந்து விழும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளன. எனவே அந்த மின் கம்பங்களை உடனே மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-எம்.விஜிதா செந்தில்குமார், தென்தாமரைகுளம்.

குடிநீர் குழாயில் உடைப்பு

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் ஆசாரிமார் தெற்கு தெருவில் பல நாட்களாக குடிநீர் குழாய் உடைந்த நிலையில் உள்ளது. இதனால் ஒவ்வொரு முறையும் மீனாட்சிபுரம் மற்றும் நாகர்கோவில் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் போது பல நூறு லிட்டர் குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. எனவே குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாகுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர். இசக்கிமுத்து, நாகர்கோவில்.

சாலை சீரமைக்கப்படுமா?

தென்தாமரைகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குமாரபெருமாள்விளை - தேரிவிளை சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்தும் பயணம் செய்கிறார்கள். சாலை சேதமடைந்துள்ளதால் பெதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வகுமார், தென்தாமரைகுளம்.


Next Story