தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பம்

தக்கலை அருகே கோழிப்போர்விளையில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இதன் நுழைவு வாயிலில் போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது. இதனால் அலுவலகத்தில் இருந்த வாகனங்கள் வெளியே வரும்போது சாலையில் வரும் வாகனங்கள் செல்லமுடியாத அளவில் சில நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயசேகர், முகமாத்தூர்.

கொசு உற்பத்தியாகும் இடம்

செறுகோல் ஊராட்சிக்கு உட்பட்ட இரவிபுதூர்கடை- பயணம் சாலையில் கழிவுநீர் ஓடை உள்ளது. இங்கு கழிவுநீர் அடைத்து நிர்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் இது மாறி உள்ளது. இந்த வழியாகத்தான் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். எனவே கழிவுநீர் ஓடையை சீரமைக்க வேண்டும்.

-பி.ஏ.கரீம், இரவிபுதூர்கடை.

சீரமைக்க வேண்டும்

பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட மிடாலக்காடு பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்குள்ள மேற்கூரை உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மழை பெய்தால் தண்ணீர் உள்ளே விழுகிறது. இதனால் இங்கு வரும் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே இதை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொன் சோபனராஜ், மிடாலக்காடு.

மழைநீர் தேங்குவதால் சிரமம்

அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியின் முன்பு பள்ளம் உள்ளது. இதனால் மழை பெய்யும் போது அருகில் உள்ள சாலையில் இருந்து வரும் மழைநீர் பள்ளியின் முன்னால் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை நிரப்புவது மட்டுமல்லாமல் பள்ளி வளாகத்திலும் நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.ராம்தாஸ், சந்தையடி.

பாதுகாப்பாக அமைக்க வேண்டும்

பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் இருக்கும் மின் கம்பத்தில் மீட்டர் இணைப்பும், பீஸ் கேரியரும் மிகவும் தாழ்வாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் சிறுவர்கள் அதை தொட்டு அசம்பாவிதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே மீட்டர் இணைப்பும், பீஸ் கேரியரும் உள்ள பெட்டியை உயரத்தில் பாதுகாப்பாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகமது ரபீக், திட்டுவிளை.

எரியாத மின்விளக்கு

ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தட்டாரவிளை சவேரியார் சிற்றாலயம் அருகே உள்ள மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே மின்விளக்கு எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அ.மரியராஜரெத்தினம், தட்டாரவிளை.

கால்வாயில் கொட்டப்படும் குப்பைகள்

சிற்றாறு அணையில் இருந்து சிற்றாறு பட்டணங்கால்வாய் குலசேகரம் வழியாக செல்கிறது. இந்த கால்வாயில் குலசேகரத்தில் பல இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இவ்வாறு கொட்டப்படும் குப்பையால் கால்வாய் தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே குலசேகரம் பேரூராட்சி நிர்வாகம் கால்வாயில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

-மணிமாறன், குலசேகரம்.


Next Story