'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 28 Nov 2022 12:30 AM IST (Updated: 28 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்

பள்ளி சுவரில் சுவரொட்டி

போடி சோனைமுத்து நகராட்சி உயர்நிலைப்பள்ளி கட்டிட சுவரில் அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள், சினிமா விளம்பர சுவரொட்டிகள் ஆகியவற்றை ஒட்டி அசுத்தம் செய்கின்றனர். இதனை தடுக்க, கல்வி சார்ந்த விழிப்புணர்வு ஓவியங்கள் மற்றும் வாசகங்களை அந்த சுவரில் எழுத வேண்டும். இதற்கு பள்ளி கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துக்குமார், போடி.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டியை அடுத்துள்ள ஏ.சித்தூரில், சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படாததால், கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் அப்பகுதியில் சிமெண்டு சாலை சேதமடைந்து கிடப்பதால், வாகன ஓட்டிகள் கழிவுநீரில் விழுந்து காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு அதிகாரிகள் சிமெண்டு சாலை அமைப்பதுடன் சாக்கடை கால்வாயையும் சீரமைக்க வேண்டும்.

-ஊர்பொதுமக்கள், எ.சித்தூர்.

ஆமை வேகத்தில் சாலை பணி

புதுச்சத்திரம் ஊராட்சி, நாலுபுளிக்கோட்டையில் இருந்து சட்டயப்புணூர் வரை நெடுஞ்சாலை அமைக்கும் பணி ஆமைவேகத்தில் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.

-ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.

தெருவிளக்கு எரியவில்லை

குஜிலியம்பாறை அருகேயுள்ள தாதாநாயக்கனூரில், தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் தெருக்கள் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. பொதுமக்கள் அப்பகுதியில் நடமாட அச்சமடைகின்றனர். எனவே எரியாத தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.

-குமார், தாத்தாநாயக்கனூர்.

குடிநீர் வினியோகம் இல்லை

திண்டுக்கல் சவேரியார்பாளையம் புஷ்பவனம் பகுதிக்கு கடந்த ஒருவாரமாக குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். கடைகளில் குடிநீர் கேன்கள் வாங்கி தாகம் தீர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சமையல் உள்ளிட்ட தேவைகளுக்கு நீரின்றி சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதிக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

-ஜெயராம், புஷ்பவனம்.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

உத்தமபாளையம் பைபாஸ் சாலை, தேரடி மெயின் பஜார் ரோடு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனம் கூட வேகமாக செல்ல முடிவதில்லை. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?.

-பக்ருதீன், உத்தமபாளையம்.

சாக்கடை கால்வாய் வசதி வேண்டும்

கடமலைக்குண்டுவை அடுத்த சோலைத்தேவன்பட்டி அங்கன்வாடி தெரு பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் கழிவுநீர் தெருவில் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் நடந்து செல்ல முடிவதில்லை. எனவே சாக்கடை கால்வாய் வசதியை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜசேகர பாண்டியன், சோலைத்தேவன்பட்டி.

புதர்மண்டி கிடக்கும் கழிவுநீர் ஓடை

கம்பம் தாத்தப்பன்குளம் 9-வது வார்டு பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. மேலும் ஓடைப்பகுதியில் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் அப்பகுதியிலேயே தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவுநீர் ஓடையை தூர்வாரி, புதர்களை அகற்ற வேண்டும்.

-ஜமால் முகைதீன், கம்பம்.

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story