'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 Dec 2022 7:00 PM GMT (Updated: 25 Dec 2022 7:00 PM GMT)

தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

புதர்மண்டி கிடக்கும் கழிவுநீர் ஓடை

திண்டுக்கல்லை அடுத்த பெரியகோட்டையில் உள்ள கழிவுநீர் ஓடை செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் ஓடையிலேயே தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே ஓடையில் உள்ள புதர்களை அகற்றி தூர்வாரும் பணியை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

-கிருஷ்ணமூர்த்தி, பெரியகோட்டை.

திருடர்கள் நடமாட்டம்

திண்டுக்கல் நெட்டுத்தெரு பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இரவில் அப்பகுதியில் நிறுத்தப்படும் டிரைசைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் திருடு போகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே திருடர்களை கண்காணித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலாஜி, திண்டுக்கல்.

சுகாதார வளாகம் வேண்டும்

தொப்பம்பட்டி ஒன்றியம் மரிச்சிலம்பு பகுதியில் சுகாதார வளாகம் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. எனவே சுகாதார வளாகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெரால்டு, வக்கம்பட்டி.

கேட்பாரற்று கிடக்கும் வாகனம்

வேடசந்தூர் தாலுகா தாட்டாரப்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை சேகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் வாகனம் அப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் கேட்பாரற்று கிடக்கிறது. வாகனத்தில் இருந்த சக்கரங்கள் மாயமாகிவிட்டன. ஆனாலும் ஊராட்சி நிர்வாகம் வாகனத்தை கண்டுகொள்ளாமல் உள்ளது.

-கணேசன், பூதிப்புரம்.

சேதமடைந்து வரும் காத்திருப்போர் அறை

தேனியை அடுத்த மேலச்சொக்கநாதநபுரம் 9-வது வார்டில் உள்ள மயானத்தில் காத்திருப்போர் அறைக்கான கட்டிடம் சேதமடைந்து வருகிறது. இதனால் அங்கு அமரவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

-கோபிநாத், மேலச்சொக்கநாதபுரம்.

அடிப்படை வசதிகள் தேவை

அய்யம்பாளையம் பேரூராட்சி ஈஸ்வர்வேல் நகரில் தெருவிளக்கு, குடிநீர், சாலை என அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-குடியிருப்புவாசிகள், ஈஸ்வர்வேல்நகர்.

மண்சரிவால் பொதுமக்கள் அவதி

தேனி புது பஸ்நிலையத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் புறவழிச்சாலையோரத்தில் கடந்த 3 மாதங்களுக்கும் முன்பு மண்சரிவு ஏற்பட்டது. இதுவரை மண் அப்புறப்படுத்தப்படவில்லை. மேலும் அப்பகுதியில் உள்ள மின்கம்பமும் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரத்தினம், தேனி.

ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல்

பெரியகுளத்தை அடுத்த வடகரை புதுப்பாலம் அருகே சாலையோரத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

-பொதுமக்கள், வடகரை.

குப்பைகளால் சுகாதாரக்கேடு

தேனி அருகே அம்மச்சியாபுரம்-அய்யனார்புரம் இடையே வைகை ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் மக்கள் நடந்து செல்ல நடைபாதை உள்ளது. அதில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. இதை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், அம்மச்சியாபுரம்.

குண்டும், குழியுமான சாலை

தேனி அருகே பூதிப்புரம் ராஜபூபால சமுத்திரம் கண்மாய் கரையோர பகுதி வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாய தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள் சிரமம் அடைகின்றனர். விளை பொருட்களை எடுத்துச் செல்லவும் சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், பூதிப்புரம்.

----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

-----------------


Next Story