தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

நடவடிக்கை

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறைகளை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும்போது அந்த தண்ணீர் பஸ்நிலையத்திற்குள் பொதுமக்கள் நடந்து செல்லும் பகுதியில் பாய்கிறது. இதனால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே, பயணிகள் நலன் கருதி கழிவறையை சுத்தம் செய்யும் தண்ணீரை கழிவுநீர் ஓடையில் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வகுமார், தென்தாமரைகுளம்.

பயணிகள் நிழற்குடை தேவை

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பொற்றையடியில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அவர்களும் மற்ற பயணிகளும் பஸ் நிறுத்தத்தில் கடும் வெயிலில் நின்று பஸ் ஏறி செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டின் இரு புறமும் பயணிகள் நிழற்குடை அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

-ராம்தாஸ், சந்சந்தையடி.

சாலையை சீரமைக்க வேண்டும்

கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட காவுவிளை முதல் உடவிளை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்லவும், நோய்வாய்ப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சாலையை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ச.ராதாகிருஷ்ணன், பாரக்கன்விளை.

சேதமடைந்த சிமெண்டு சிலாப்பு

நாகர்கோவிலில் வட்டவிளை சந்திப்பில் நடைபாதையில் மழைநீர் ஓடையின் மீது அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்பு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த சிமெண்டு சிலாப்பை அகற்றி விட்டு புதிய சிலாப்பை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜவஹர் அலி, இளங்கடை.

விபத்து அபாயம்

சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதித்தபுரத்தில் உள்ள தெருக்களில் மின் கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு மின்கம்பத்தில் உள்ள விளக்கின் சுவிட்சு பெட்டி சேதமடைந்து அதன் மூடி திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் சிறுவர்கள் சுவிட்சு பெட்டியை தொட்டால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்து உள்ள சுவிட்சு பெட்டியை சீரமைத்து மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.எஸ்.மணிகண்டன் ஆதித்தபுரம்.

புதரை அகற்ற வேண்டும்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட புன்னைநகர் வீட்டு வசதி காலனியில் குடியிருப்புகளின் எதிரே அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் அங்கு விஷப்பூச்சிகளின் வசிப்பிடமாக மாற வாய்ப்புகள் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜி.ஜோசப் செல்வன், புன்னைநகர்.

பெயர் பலகை அமைக்கப்படுமா?

நாகர்கோவில் பீச் ரோட்டில் இருந்து சங்குத்துறை கடற்கரைக்கு செல்லும் சாலையில் என்.ஜி.ஓ. காலனி உள்ளது. இந்த பகுதியில் வாகன ஓட்டிகள் வசதிக்காக என்.ஜி.ஓ.காலனி என ஊர் பெயர் பலகை அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த பெயர் பலகை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சேதமடைந்த ஊர் பெயர் பலகையை மீண்டும் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமநாதன், மீனாட்சிபுரம்.


Next Story