'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

உத்தமபாளையம் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் இருக்கிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

-பொதுமக்கள், உத்தமபாளையம்.

விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்

பழனி ஆர்.எப். ரோட்டில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அந்த பள்ளத்தை மூடாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் இரவில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகராஜன், பழனி.

சேதமடைந்து வரும் கட்டிடம்

சின்னமனூரை அடுத்த சீப்பாலக்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சமுதாயக்கூட கட்டிடம் பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் கட்டிடம் இடிந்துவிழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்து வரும் கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர்மக்கள், சீப்பாலக்கோட்டை.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அருகே, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குழாய் உடைப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பன்னீர், திண்டுக்கல்.

தரைப்பாலம் சேதம்

திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் அமைக்கப்பட்ட தரைப்பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் பாலத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதே நிலை நீடித்தால் தரைப்பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே தரைப்பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.

-பாண்டி, திண்டுக்கல்.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

பழனி சரவண பொய்கை அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். மேலும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் சாலையில் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாரிமுத்து, பழனி.

தெருவில் ஓடும் கழிவுநீர் (படம்)

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மலைப்பட்டி சாலையில் உள்ள மகான்ஸ்ரீசேஷாத்திரிநகரில் தெருவில் கழிவுநீர் ஓடை போன்று செல்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து விட்டது. மேலும் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. இதை தவிர்க்க சாக்கடை கால்வாய்கள் அமைத்து தரவேண்டும். -பிரபாத், பாலகிருஷ்ணாபுரம்.

சேதம் அடைந்த சாலை

தேனி கே.ஆர்.ஆர்.நகரில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் பஸ்நிலையம், கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு செல்லும் அதிகாரிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும். -தினேஷ், தேனி.

தேங்கி கிடக்கும் குப்பைகள்

தேனி நகரில் மதுரை சாலையில் ராஜவாய்க்காலுடன் பாரஸ்ட் சாலை ஓடை சந்திக்கும் பகுதியில் பாலித்தீன் குப்பைகள் கால்வாயில் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். - குமார், தேனி.

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story