'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி'க்கு நன்றி

உத்தமபாளையம் நகரில் வேகத்தடைகளில் வெள்ளை நிறத்தில் அடையாள குறிகள் வரையப்படாமல் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கிவிடும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி'யின் புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து வேகத்தடைகளில் வெள்ளை நிற அடையாள குறிகள் வரையப்பட்டன. இதற்காக 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

-பக்ருதீன், உத்தமபாளையம்.

சின்னமனூர் கிழக்கு ஒன்றியம் அப்பிபட்டி ஊராட்சியில் காளியம்மன் கோவில் அருகே பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், அந்தரத்தில் தொங்கியது குறித்து 'தினத்தந்தி'யின் புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் சரிசெய்யப்பட்டு, மீண்டும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகம், அதிகாரிகள் மற்றும் 'தினத்தந்தி'க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

-ரவி, அப்பிபட்டி.

சாலையில் பள்ளங்கள்

திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியில் உள்ள ஆர்த்தி தியேட்டர் சாலை சேதமாகி ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளங்களில் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே சாலையில் உருவான பள்ளங்களை சரிசெய்ய வேண்டும். பாலமுருகன், ஒய்.எம்.ஆர்.பட்டி.

திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடம்

பழனி நகராட்சி 26-வது வார்டு பாரதிதாசன் சாலை, திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக மாறிவருகிறது. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. பெண்கள் தனியாக செல்வதற்கு சங்கடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ்குமார், பழனி.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

திண்டுக்கல்லில் இருந்து ஏ.வெள்ளோடு செல்லும் சாலையில், யாகப்பன்பட்டி பிரிவு அருகே மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களில் மின்கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பிகளை உயரத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.

-தமிழ்பிரியன், திண்டுக்கல்.

ஆற்று பாலம் சேதம்

திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டியில் இருந்து கும்மம்பட்டிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள குடகனாறு பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதம் அடைந்து விட்டது. அந்த வழியாக இரவில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் ஆபத்து உள்ளது. எனவே பாலத்தின் சுவரை சீரமைக்க வேண்டும்.

-ஜெரால்டு, வக்கம்பட்டி.

தார்சாலை வசதி தேவை

ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டை ஊராட்சியில் பிரவான்பட்டி, காமன்பட்டி கிராமங்களில் தார்சாலை வசதி இல்லாத பகுதிகள் உள்ளன. இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே தார்சாலை வசதி செய்து தரவேண்டும்.

-ரமேஷ்குமார், பிரவான்பட்டி.

போதை ஆசாமிகள் தொல்லை

கூடலூர் பாலசுப்பிரமணியம்பிள்ளை தெருவில் உள்ள தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. அதை பயன்படுத்தி கொண்டு இரவில் தெருவில் அமர்ந்து மது குடிக்கின்றனர். அதோடு மதுபாட்டில்களை தெருவில் உடைத்து ரகளையில் ஈடுபடுகின்றனர். எனவே தெருவிளக்குகளை சரிசெய்து, போதை ஆசாமிகளின் தொல்லையை தடுக்க வேண்டும்.

-சிவா, கூடலூர்.

பாதுகாப்பற்ற மின்சார பெட்டி

போடி மேலத்தெருவில் பள்ளிவாசல் அருகே மின்மோட்டாருடன் கூடிய தண்ணீர் தொட்டிக்கான மின்சார பெட்டி தாழ்வாக திறந்தநிலையில் கிடக்கிறது. சிறுவர்கள் அதிகம் விளையாடும் பகுதியாக இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் மின்சார பெட்டியை, பூட்டி வைக்க வேண்டும்.

-பொதுமக்கள், போடி.

போக்குவரத்து நெரிசல்

போடி பஸ் நிலையத்துக்குள் வராமல் ஒருசில வெளியூர் பஸ்கள், சாலையில் நின்று பயணிகளை இறக்கி விடுகின்றன. இதனால் போடி பஸ் நிலைய பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், போடி.

=======

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story