'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

நூலகம் அமைக்க வேண்டும்

திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டியில் நூலக வசதி இல்லை. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பக்கத்து ஊரில் செயல்படும் நூலகத்துக்கு சென்று புத்தகங்களை படிக்கும் நிலை உள்ளது. இதனால் மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே வக்கம்பட்டியில் நூலகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெரால்டு, வக்கம்பட்டி.

ஆமை வேகத்தில் பூங்கா சீரமைப்பு பணி

கம்பம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் காந்திஜி பூங்கா சீரமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. இந்த பூங்கா வளாகத்தில் தான் உடற்பயிற்சி கூடம், தியான மையம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகளும் தாமதமாகி வருகிறது. எனவே பூங்கா அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபு, கம்பம்.

முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்

உப்புக்கோட்டை பெருமாள் கோவிலில் இருந்து சின்னச்சாமி கோவிலுக்கு செல்லும் சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகளும் வெளியே தெரிகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.

-ஊர்மக்கள், உப்புக்கோட்டை.

நிரந்தர பணியாளர் அவசியம்

உத்தமபாளையத்தில் உள்ள 4-ம் எண் ரேஷன் கடையில் பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்படுவதில்லை. மேலும் அங்கு நிரந்தர பணியாளரும் இல்லை. இதனால் ரேஷன் பொருட்கள் முறையாக கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே ரேஷன் கடைக்கு நிரந்தர பணியாளரை நியமிப்பதுடன், பொருட்களையும் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும்.

-பக்ருதீன், உத்தமபாளையம்.

சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்

பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி 4-வது வார்டு இடும்பன்நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை உடனடியாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாரிக்கண்ணன், சிவகிரிப்பட்டி.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

திண்டுக்கல் சாலைரோட்டில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை விரைவில் தூர்வார வேண்டும்.

-ராஜேஷ் கண்ணன், திண்டுக்கல்.

குவிந்து கிடக்கும் குப்பை

ஒட்டன்சத்திரம் 11-வது வார்டு சிக்கந்தர்நகர் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுவதால் அவர்களும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும் சாலையோரங்களில் குப்பை தொட்டிகளும் வைக்க வேண்டும்.

-திருப்பதி, ஒட்டன்சத்திரம்.

விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

பழனி அடிவாரம் பொன்னகரம் பகுதியில், சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், கால்வாய் திறந்து கிடப்பது தெரியாமல் அதனை கடக்க முயலும் போது விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாக்கடை கால்வாயை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், பழனி.

கால்வாய் வசதி வேண்டும்

கம்பம் நகராட்சி 31-வது வார்டு விவேகானந்தர் தெருவில் சாக்கடை கால்வாய் வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் வீடுகள் முன்பே தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை முறையாக செய்து கொடுக்க வேண்டும்.

-தெருவாசிகள், கம்பம்.

போலீசாரை நியமிக்க வேண்டும்

கம்பம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் போலீசார் சரிவர நியமிக்கப்படுவதில்லை. இதனால் பஸ் நிலையத்தில் குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே புறக்காவல் நிலையத்தில் சுழற்சி முறையில் போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

-பொதுமக்கள், கம்பம்.

-----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

----------------


Next Story