'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

குடிநீர் திருட்டு

சித்தையன்கோட்டை பேரூராட்சி அழகர்நாயக்கன்பட்டியில் சிலர் குடிநீர் இணைப்புகளில் மோட்டார் வைத்து அதிக அளவில் தண்ணீரை எடுக்கின்றனர். இதனால் சிலருக்கு தேவையான அளவு குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே குடிநீர் திருடப்படுவதை தடுக்க வேண்டும். பொதுமக்கள், அழகர்நாயக்கன்பட்டி.

சாலை ஓரத்தில் இறைச்சி கழிவு

குஜிலியம்பாறை தாலுகா டி.கூடலூர் கடைவீதியில் சாலை ஓரத்தில் இறைச்சி கழிவுகளை வீசி செல்கின்றனர். அது உடனுக்குடன் அகற்றப்படாததால் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாலை ஓரத்தில் கிடக்கும் இறைச்சி கழிவுகளை அகற்றுவதோடு, இனிமேல் யாரும் கழிவுகளை கொட்டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சண்முகம், டி.கூடலூர்.

குடிநீர் தொட்டி சேதம்

நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டி சந்தைக்கு அருகே உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அடைந்து வருகிறது. இதனால் குடிநீர் தொட்டியின் அருகே செல்வதற்கு மக்கள் பயப்படுகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்க வேண்டும். அய்யர்பாண்டி, நிலக்கோட்டை.

குப்பை குவியல்

பழனியில் இடும்பன்கோவில் அருகே இட்டேரி சாலையில் குப்பைகள் மலை போன்று குவிந்து கிடக்கிறது. அந்த வழியாக செல்லும் மக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், பழனி.

போக்குவரத்து நெரிசல்

போடியில் ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளி அருகே தினமும் காலை, மாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், போடி.

சாலை பணி எப்போது?

பழனி தாலுகா மேலக்கோட்டை ஊராட்சி கரட்டுப்பட்டி பிரிவில் இருந்து அமரப்பூண்டி வரை புதிய சாலை அமைப்பதற்காக பழைய தார்சாலையை பெயர்த்து சமப்படுத்தும் பணி நடந்தது. அதோடு சாலை பணி நின்று விட்டது. இதனால் இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவுக்கு சாலை மோசமாகிவிட்டது. எனவே சாலை பணியை விரைவில் தொடங்க வேண்டும். முருகன், மேலக்கோட்டை.

செல்போன் சிக்னல் கிடைக்குமா?

திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை தவுட்டுகடை பகுதியில் பி.எஸ்.என்.எல். செல்போன் சிக்னல் கிடைப்பதில்லை. இதனால் பி.எஸ்.என்.எல். செல்போன் சிம்கார்டு பயன்படுத்தும் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், சிறுமலை.

கூடுதல் மருத்துவ பணியாளர்கள்

கம்பம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். ஆனால் ஆய்வகத்தில் பரிசோதனைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். அய்யனார், கோம்பை.

அபாய மின்கம்பம்

பழனி அருகே மானூர் தெற்கு தெருவில் ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து, எந்த நேரத்திலும் முறிந்து விழுந்து விடும் நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்று வீசும் போது மக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அபாய மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நடவேண்டும். மாரிமுத்து, மானூர்.

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story