'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஈரோடு

வீணாகும் குடிநீர்

ஈரோடு-பெருந்துறை ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகம் பஸ் நிறுத்தம் (ஆசிரியர் காலனி பிரிவு) அருகே, கரூர் வைஸ்யா வங்கி எதிரே என 2 இடங்களிலும் உள்ள குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதன் காரணமாக சாலையும் பழுது அடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. உடனே மாநகராட்சி அதிகாரிகள் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து, ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.முத்துசாமி, ஈரோடு

அடிப்படை வசதி

மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட நகராட்சி நகரில் கடந்த 20 ஆண்டுகளாக சாக்கடை வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற வசதிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். உடனே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், நகராட்சி நகர்.

பணியை முடிப்பார்களா?

அந்தியூர் அடுத்த பர்கூரில் இருந்து தேவர்மலை செல்லும் ரோட்டில் ஈரெட்டி என்னுமிடத்தில் 6 மாதங்களாக ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஈரெட்டியை சுற்றியுள்ள 13 கிராமமக்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க ஆவன செய்வார்களா?

பொதுமக்கள், தேவர்மலை.

பாலம் இடிந்தது

பர்கூர் மலையில் சின்ன செங்குளம் பகுதியில் உள்ள ஓடையில் சிறு பாலம் கட்டும் பணி 3 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செங்குளம் பகுதியில் சாரல் மழை பெய்தது. இதில் ஓடையில் தண்ணீர் வழிந்தோடியது. இதில் புதிதாக போடப்பட்ட பாலம் இடிந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுவிட்டது. எனவே பாலம் இடிந்த இடத்தில் புதிதாக தரமான பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பர்கூர்.


Related Tags :
Next Story