'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பழுதடைந்த சாலை
கோபியில் உள்ள சத்தியமங்கலம் ரோட்டில் நகராட்சி அலுவலகம் உள்ளது. இந்த ரோட்டின் முன்பு தார் பழுதடைந்து அதில் கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே பழுதடைந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
பாலத்தில் குழி
சென்னிமலை பேரூராட்சி, கூத்தம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அக்கரையாம்பாளையம் நால் ரோட்டில் கனரக வாகனங்கள் அடிக்கடி சென்று வந்ததால் பாலம் பழுதாகி விரிசல் அடைந்து குழி ஏற்பட்டு விட்டது. இதனால் அந்த ரோடு வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் குழி விழுந்த இடம் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதற்கு வசதியாக, குழி உள்ள இடத்தில் மரக்கிளைகளை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அடையாளமாக வைத்து உள்ளனர். எனவே பெரிய விபத்து ஏற்படும் முன் பாலத்தில் ஏற்பட்டு உள்ள குழியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அக்கரையாம்பாளையம்.
அரசு பஸ்கள் இயக்கப்படுமா?
அந்தியூரில் இருந்து ஒலகடம், குட்டமேடு வழியாக மும்மிரெட்டிபாளையம், காௌந்தபாளையம் வரை மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சில் அந்த பகுதியை சேர்ந்த பள்ளிக்கூட, கல்லூரி மாணவ- மாணவிகள், அன்றாட கூலித்தொழிலாளர்கள் சென்றனர். கொரோனா 2-வது அலைக்கு பின்னர், அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அந்தியூரில் இருந்து ஒலகடம், குட்டமேடு கிராமங்கள் வழியாக பவானிக்கு அரசு பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், மும்மிரெட்டிபாளையம்.
மூடி போடப்படுமா?
கோபியில் இருந்து பச்சை மலை கோவிலுக்கு செல்லும் ரோட்டின் ஓரமாக குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. பின்னர் அந்த இடத்தில் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் அந்த தொட்டி மூடப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வாகனங்களில் வருபவர்களுக்கு குழி இருப்பது தெரியாது. இதன்காரணமாக விபத்து நடந்து உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த தொட்டிக்கு மூடி போட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
போக்குவரத்துக்கு இடையூறு
கொடுமுடி அருகே சோளக்காளிபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனை சாலையின் கிழக்கு வீதியில் தெருவின் மையப்பகுதியில் மின்கம்பம் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இந்த மின்கம்பத்தை தெருவின் ஒரத்தில் மாற்றி அமைத்தால் வாகனங்கள் சென்று வர ஏதுவாகும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணன், சோளக்காளிபாளையம்.
நாய்கள் தொல்லை
ஈரோடு நாடார்மேடு காமராஜர் வீதியில் நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துகின்றன. சிறுவர், சிறுமிகளை கடித்து குதறி வருகின்றன. உடனே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், காமராஜர் வீதி, நாடார்மேடு.
தாழ்வாக செல்லும் மின் கம்பி
சத்தியமங்கலம் தாலுகாகவுக்கு உள்பட்ட நல்லூர் காந்தி கிராமத்தில் உள்ள அண்ணா வீதியில் மின் கம்பம் ஒன்று உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்குள்ள மின் கம்பத்தில் கனரக வாகனம் மோதிவிட்டது. இதனால் இந்த மின் கம்பம் சாய்ந்ததுடன், அதில் உள்ள மின் கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் மின் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே தாழ்வாக மின் கம்பியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், காந்திபுரம்
பாராட்டு
அந்தியூரில் உள்ள சத்தியமங்கலம் ரோட்டில் வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்த பெயர் பலகையில் உள்ள ஊர் பெயரை மறைத்தபடி மரங்கள் வளர்ந்திருந்தன. இதுபற்றிய செய்தி 'தினத்தந்தி' நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து ஊர் பெயரை மறைத்து வளர்ந்திருந்த மரக்கிளைகளை அதிகாரிகள் வெட்டி அப்புறப்படுத்தினர். இதுபற்றி செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.
பொதுமக்கள், அந்தியூர்






