'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ரோட்டில் பள்ளம்
அந்தியூரில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் சாலையில் பிரம்மதேசம் பாலம் அருகில் பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள், ரோட்டில் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே ரோட்டில் உள்ள பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருள், புதுப்பாளையம்.
குண்டும், குழியுமான சாலை
ஈரோடு வீரப்பன்சத்திரம் சத்தி ரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு எதிரே சந்து உள்ளது. இந்த சந்தானது ஜான்சி நகருக்கு செல்கிறது. சந்து பகுதியில் உள்ள சாலையில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக குழி தோண்டப்பட்டு மூடப்பட்டது. ஆனால் மீண்டும் சாலை போடப்படவில்லை. இதனால் அந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஜான்சி நகர்.
குப்பை அகற்றப்படுமா?
கோபி மொடச்சூர் ரோட்டில் இருந்து கல்ராமணி வழியாக நாதிபாளையம் செல்லும் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் 2 இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளதுடன், ஒருவித துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் காற்று வீசும்போது குப்பை தூசிகள் பறந்து சென்று அந்த வழியாக நடந்து மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
பஸ் இயக்க வேண்டும்
அந்தியூரில் இருந்து நகலூர், அத்தாணி வழியாக டி.என்.பாளையம், கோபி செல்வதற்கு அரசு டவுன் ஒன்று இயக்கப்பட்டது. கொரோனா 2-வது அலைக்கு பின்னர் அந்த டவுன் பஸ் இயக்கப்படவில்லை. இதன்காரணமாக அந்த பஸ்சில் அன்றாட பயணம் செய்து வந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மீண்டும் அந்த பஸ்சை இயக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அந்தியூர்.
சுகாதாரக்கேடு
ஈரோடு எல்லப்பாளையத்தில் இருந்து பச்சைப்பாளி செல்லும் ரோட்டில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் ஒருவித துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், எல்லப்பாளையம்.
பாராட்டு
டி.என்.பாளையத்தை அடுத்த கொண்டையம்பாளையம் ஆரம்ப பள்ளி அருகே மின் கம்பி செல்கிறது. இந்த மின் கம்பியை அந்த பகுதியில் உள்ள மரத்தின் கிளைகள் தொட்டபடி இருந்தன. இதனால் மின் விபத்து நிகழும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து மின் வாரிய ஊழியர்கள் அங்கு சென்று மின் கம்பியை தொட்டபடி இருந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். இதுபற்றி செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் நன்றிைய தொிவித்து கொள்கிறோம்.
பொதுமக்கள், கொண்டையம்பாளையம்