'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குதிரைகளால் தொல்லை
அந்தியூர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குதிரைகள் ரோட்டில் சுற்றி திரிகின்றன. குறிப்பாக அந்தியூர்-பர்கூர் ரோட்டில் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. அங்கு பள்ளிக்கூடங்கள் முடிந்து மாணவ-மாணவிகள் வரும்போது குதிரைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொள்வதால், அவர்கள் பயந்து விடுகிறார்கள். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரியும் குதிரைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
அருள், அந்தியூர்.
புதருக்குள் குழாய்
அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் விஷ ஜந்துகள் ஊர்ந்து வர வாய்ப்பு உள்ளது. மேலும் குழாயின் உயரம் மிகவும் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் குடங்களை வைத்து தண்ணீர் பிடிக்க சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் குழாயை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்தவும், குழாயின் உயரத்தை அதிகப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
பொதுமக்கள், அந்தியூர்.
பெண்கள் அவதி
பெருந்துறை சேனட்டோரியம் முதல் சிலேட்டர் நகர் வரையிலான தார்சாலை உள்ள இடத்தில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்ல அச்சமாக உள்ளது. பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மின்விளக்கு வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
நா.இளங்கோராஜா, தமிழ்நகர்.
போக்குவரத்துக்கு இடையூறு
ஈரோடு பெரியசேமூர் காவிரி நகர் 1-வது வீதியில் கற்பக விநாயகர் கோவில் சாலை நுழையும் இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காற்று அடிக்கும்போது பேனர் கீழே சாயும் நிலை உள்ளது. மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்பாக பேனரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், காவேரி நகர், பெரியசேமூர்.
வீணாகும் குடிநீர்
ஈரோட்டை அடுத்த நசியனூர் அருகே உள்ள சாமிகவுண்டன்பாளையம் பழைய காலனியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உடனே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சாமிக்கவுண்டன்பாளையம்.
குண்டும்-குழியுமான ரோடு
ஈரோடு கே.என்.கே. சாலை வழியாக தினமும் முக்கிய நகரங்களுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ேராடு ஆங்காங்கே குண்டும்-குழியுமாக இருப்பதால் வாகனங்கள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பால.அண்ணாதுரை, அரசிளங்கோ வீதி, கருங்கல்பாளையம்.