தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கி நிற்கும் கழிவுநீர்
அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையம் ஊராட்சி புதுமேட்டூர் ரோஜாநகர் பகுதியில் முறையாக சாக்கடை வடிகால் கட்டப்படவில்லை. பாதி கட்டி முடிக்கப்பட்டு அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குட்டை போல் ஓரிடத்தில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவி வருகிறது. உடனே சாக்கடை வடிகாலை முழுமையாக கட்டவும், கழிவுநீர் தேங்குவதையும் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குணால், புதுமேட்டூர்
குவிந்துள்ள குப்பைகள்
அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள நேரு வீதியில் குப்பைகள் கொட்டப்பட்டு் கிடக்கின்றன. எனவே அப்பகுதியில் குப்பைகளை கொட்டக்கூடாது என அந்தியூர் பேரூராட்சி சார்பில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி ஒரு சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவவும் வாய்ப்புள்ளது. குப்பைகள் கொட்டுவது உடனே தடுக்கப்படுமா?
ராமமூர்த்தி, அந்தியூர்
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட மொசுவண்ணா வீதியில் கடந்த ஒரு வாரமாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படுகிறது. உடனே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மதுமதி, ஈரோடு
ஆபத்தான மின்கம்பம்
கோபி அருகே பெரியகொடிவேரி ஒட்டர்பாளையத்தில் மின்கம்பம் உள்ளது. இதன் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன் காரணமாக உயிரிழப்பு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை உடனே மாற்றி அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
தர்மராஜன், ஒட்டர்பாளையம்
ரோட்டில் திடீர் பள்ளம்
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலமாக குழி தோண்டினர். அந்த பணிகள் முடிந்தபிறகு குழி மூடப்பட்டது. அந்த வழியாக வாகனங்கள் சென்றன. இதனால் அங்கு திடீர் பள்ளம் உருவானது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தவறி விழும் அபாயம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து விபத்து ஏற்படாமல் இருக்க வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்த பள்ளத்துக்கு அருகில் பேரிகார்டர் வைக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
சுந்தர், ஈரோடு
வாகன ஓட்டிகள் அவதி
ஈரோடு முனிசிபல் காலனி ரோட்டில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்கின்றன. மேலும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகளை சந்தித்து அவதியடைந்து வருகின்றனர். உடனே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபு, ஈரோடு
எரியாத தெருவிளக்கு
கொடுமுடி காங்கேயம் ரோட்டில் உள்ள எஸ்.என்.பி. நகரில் தெருவிளக்கு உள்ளது. இது கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக சிறுவர்-சிறுமிகள், பெண்கள், முதியவர்கள் செல்ல அச்சப்படுகிறார்கள். மிகவும் சிரமப்பட்டு் வருகிறார்கள். உடனே தெருவிளக்கை ஒளிர செய்ய அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
கே.விஜயகுமார், கொடுமுடி