'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஈரோடு

வீணாகும் குடிநீர்

ஈரோடு பழையபாளையம் பெருந்துறைரோட்டில் ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு எதிர்புறம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் வீணாக செல்கிறது. பல நாட்களாக உடைப்பு சரிசெய்யப்படவில்லை. எனவே குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராம்பிரபு, பழையபாளையம்.

தெருவிளக்கு ஒளிருமா?

அந்தியூர் அருகே உள்ள பட்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள 5 மின்கம்பங்களில் மின்விளக்குகள் ஒளிர்வதில்லை. ஆனாலும் இதுவரை சரிசெய்யப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இனியாவது நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை ஒளிரச்செய்வார்களா?

பிரசாந்த், பட்லூர்.

ஆபத்தான மின்கம்பம்

கோபிசெட்டிபாளையம் பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையத்தில் வேங்கையம்மன் கோவில் நுழைவுவாயில் முன்பு மின்கம்பம் உள்ளது. இதிலுள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எப்போது வேண்டு்மானாலும் மின்கம்பம் முறிந்து விழலாம். அப்போது பேராபத்து நிகழ வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையம்.

புதர்மண்டிய டிரான்ஸ்பார்மர்

அந்தியூர் வெள்ளாளபாளையத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டிக்கிடக்கிறது. மேலும் செடிகள் மின்கம்பிகளை உரசும் நிலைக்கு சென்றுவிட்டன. அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை சுற்றியுள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

முருகேசன், வெள்ளாளபாளையம்.

ரோட்டில் பள்ளம்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் 3 ரோடுகள் சந்திக்கும் இடத்தில் ரோட்டில் பெரிய குழி ஏற்பட்டுள்ளது. எப்போதும் வாகன போக்குவரத்து பரபரப்பாக காணப்படும் இந்த ரோட்டில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் குழிகளில் இறங்கி ஏறும்போது தடுமாறி கீழே விழுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே ரோட்டில் ஏற்பட்டுள்ள குழியை மூட ஆவன செய்ய வேண்டும்.

கண்ணன், ஈரோடு.

அடிப்படை வசதி இல்லை

கோபி அருகே உள்ள வேட்டைக்காரன் கோவில் கிழக்குக்கரடு வீதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு தார்சாலை வசதி இல்லை. குண்டும், குழியுமான மண்பாதை மட்டுமே உள்ளது. முறையான சாக்கடை வசதியும் இல்லை. இதனால் கழிவுநீர் வெட்டவெளியில் விடப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வேட்டைக்காரன் கிழக்குகரடு வீதியில் தார்சாலை அமைத்து, சாக்கடை வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வேட்டைக்காரன் கோவில்.

சாக்கடை-சாலை வேண்டும்

ஈரோடு பெரியசேமூர் கொங்கு வேளாண் நகர் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு சாக்கடை வசதியோ, தார்சாலைேயா கிடையாது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாதையில் தேங்கியிருக்கிறது. சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. முறையான சாலையில்லாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். இதுகுறித்து ஏற்கனவே அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்ைக எடுக்கப்படவில்லை. இனியாவது பெரியசேமூர் வேளாண் நகரில் சாக்கடை, சாைல வசதி ஏற்படுத்தி தருவார்களா?

பிரம்மரிஷி பீடம், பெரியசேமூர்.

மின்விளக்குகள் ஒளிரவில்லை

அந்தியூர் ஒன்றியம் கீழ்வாணி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர் காலனியில் 4 தெருக்கள் உள்ளன. இதில் 6 மின்விளக்குகள் கடந்த ஒரு மாதமாக ஒளிரவில்லை. இதனால் பெண்களும், முதியவர்களும் இரவு நேரத்தில் நடமாட அச்சப்படுகிறார்கள். எனவே மின்வாரிய அதிகாரிகள் இந்திரா நகரில் ஒளிராத மின்விளக்குகளை ஒளிரச்செய்ய வேண்டும்.

பொதுமக்கள். இந்திராநகர்


Related Tags :
Next Story