'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மோசமான சாலை
ஈரோடு காசிபாளையத்தில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு செல்லும் சாலையில் ஆபத்தான பள்ளம் உருவாகி உள்ளது. ஏற்கனவே அந்த சாலை மிகவும் குறுகலாக இருப்பதால், பள்ளத்தில் சிக்கி இருசக்கர வாகனங்களில் செல்பவர்க'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்ள் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே மோசமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பவித்ரா, காசிபாளையம்.
போக்குவரத்துக்கு இடையூறு
சென்னிமலை ரோட்டில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து முத்தம்பாளையம் வீட்டு வசதிவாரியம் பகுதி- 3-க்கு ரோடு ஒன்று செல்கிறது. இந்த ரோட்டை ஆக்கிரமித்து பாதி அளவுக்கு செடிகள், மரக்கிளைகள் வளர்ந்து உள்ளன. இதனால் அந்த ரோட்டில் வாகனங்கள் ஒன்றையொன்றை விலகி செல்லும்போது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேலும் செடிகள் வாகன ஓட்டிகள் மீது பட்டு உடலில் கீறல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள செடி மற்றும் மரக்கிளைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
கழிப்பறை பராமரிக்கப்படுமா?
பவானி ஊராட்சி ஒன்றியம் பெரியபுலியூர் முதல் வார்டுக்கு உள்பட்ட சூளைமேடு கிராமத்தில் கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறை முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் கழிப்பறையை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் கழிப்பறைக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு பழுதடைந்து உள்ளது. இதனால் கழிப்பறை முற்றிலும் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகிறது. இதன்காரணமாக அங்குள்ள பொதுமக்கள், திறந்த வெளி பகுதியையே கழிப்பறையாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே கழிப்பறையை முறையாக பராமரிப்பதுடன், ஆழ்துளை கிணற்றையும் சரி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துரைசாமி, சூளைமேடு.
ரோட்டில் கழிவுநீர்
ஈரோடு நாராயணவலசு அம்பேத்கர் நகர் பகுதியில் சாக்கடை வடிகால் உடைந்தும், முறையாக பராமரிக்கப்படாமலும் உள்ளது. இதனால் சாக்கடை வடிகாலில் இருந்து கழிவுநீர் வெளியேறி ரோட்டில் செல்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை வடிகாலை முறையாக கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜமாணிக்கம், அம்பேத்கர் நகர்.
குப்பை அகற்றப்படுமா?
கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் கரட்டூர் அருகே கோபி நகராட்சியால் அமைக்கப்பட்ட வளைவு உள்ளது. இந்த வளைவு அருகே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அந்த ரேர்டின் வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது குப்பை தூசிகள் விழுகிறது. எனவே சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
குதிரைகளால் தொல்லை
பவானி, குருப்பநாயக்கன்பாளையம், காடையாம்பட்டி ஆகிய பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட குதிரைகள் ரோட்டில் சுற்றிதிரிகின்றன. இந்த குதிரைகள் ரோட்டில் நெடுக்கும், குறுக்குமாக ஓடுகின்றன. அவ்வாறு ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் குதிரைகளால் கீேழ விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். மேலும் காடையாம்பட்டி, குருப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இரவில் குதிரைகள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள பயிர்களை சேதப்படுத்துகின்றன. எனவே ரோட்டில் சுற்றிதிரிந்து தொல்லை கொடுக்கும் குதிரைகளை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பவானி.