'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஈரோடு

பழுதடைந்த ரோடு

கோபியில் சத்தியமங்கலம் ரோட்டில் கச்சேரி மேடு பகுதி உள்ளது. அந்த பகுதி அருகில் 3 ரோடுகள் சந்திக்கும் இடத்தில் குழி தோண்டப்பட்டது. ஆனால் அந்த குழி சரியாக மூடப்படவில்லை. இதன்காரணமாக ரோடு மேடும், பள்ளமுமாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

தெருவிளக்குகள் பொருத்தப்படுமா?

அந்தியூர் அருகே உள்ள உள்ளதவுட்டுப்பாளையத்தில் இருந்து அரசு போக்குவரத்து பணிமனை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோட்டில் மின் கம்பங்கள் உள்ளன. ஆனால் இந்த மின் கம்பங்களில் ெதருவிளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த ரோடு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக பணிமனைக்கு செல்லும் போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் பெண்கள் அச்சத்தில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே அந்த ரோட்டில் உள்ள மின் கம்பத்தில் தெருவிளக்குகள் பொருத்த மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமசாமி, அந்தியூர்.

சுகாதார சீா்கேடு

அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் ஏரியில் அந்த பகுதியில் உள்ள கோழி இறைச்சியின் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் தண்ணீர் மாசுபடுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு நோய்கள் பரவவும் வாய்ப்பு உள்ளது. எனவே ஆப்பக்கூடல் ஏரியில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஆப்பக்கூடல்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கோபி பச்சைமலை செல்லும் ரோட்டில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. மேலும் சிலர் அந்த குப்பைகளில் தீ வைத்துவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் கரும்புகை எழும்புவதோடு, அந்த வழியாக செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

புதர்கள் அகற்றப்படுமா?

ஈரோடு சம்பத் நகரில் பாதசாரிகள் நடந்து செல்ல வசதியாக நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த நடைமேடை பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் அந்த நடைேமடையை பாதசாரிகள் பயன்படுத்த முடியவில்லை. எனவே நடைமேடையில் வளர்ந்து உள்ள புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

பாராட்டு

கோபி புதுக்காடு அருகே உள்ள நஞ்சகவுண்டன்பாளையம் சின்னசாமி 3-வது வீதியில் உள்ள மின் கம்பத்தின் அடி பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது. இதுபற்றிய செய்தி 'தினத்தந்தி' நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து மின்சார வாரிய அதிகாரிகள் அங்கு சென்று மின் கம்பத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் கலவை மூலம் சீரமைத்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மின் வாரிய அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

பொதுமக்கள், நஞ்சகவுண்டன்பாளையம்.


Related Tags :
Next Story