தினத்தந்தி செய்தி எதிரொலி: மழைநீர் தேங்கிய குடியிருப்பு பகுதியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு


தினத்தந்தி செய்தி எதிரொலி: மழைநீர் தேங்கிய குடியிருப்பு பகுதியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு
x

மழைநீர் தேங்கிய குடியிருப்பு பகுதியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அப்பகுதி பொதுமக்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டு ஹரே ராம் நகர் குடியிருப்பு பகுதியில் சாலைகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிப்பதாகவும், கழிவுநீரும் மழையுடன் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

தொடர்ந்து நேற்று முன்தினம் அப்பகுதி பொதுமக்கள் சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் இறங்கி நாற்று நடும் போராட்டத்தை நடத்தினர். இந்த செய்தி நேற்று தினத்தந்தியில் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டது.

இதை பார்த்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபு சங்கர் உடனடியாக அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து அப்பகுதி பொதுமக்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்கள் குறைகளை தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா, நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் இருந்தனர்.


Next Story