"தினத்தந்தி" செய்தி எதிரொலி:ஈரோடு கே.கே.நகர்-ரங்கம்பாளையம் தற்காலிக பாதையில் புதர்கள் அகற்றம்;வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
''தினத்தந்தி'' செய்தி எதிரொலியாக ஈரோடு கே.கே.நகரில் இருந்து ரங்கம்பாளையம் செல்லும் தற்காலிக பாதையில் புதர்கள் அகற்றப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
''தினத்தந்தி'' செய்தி எதிரொலியாக ஈரோடு கே.கே.நகரில் இருந்து ரங்கம்பாளையம் செல்லும் தற்காலிக பாதையில் புதர்கள் அகற்றப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தற்காலிக பாதை
ஈரோடு சென்னிமலை ரோடு கலைஞர் கருணாநிதி நகர் (கே.கே.நகர்) அருகே ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது. இங்கு ரெயில்வே துறை மூலம் பராமரிப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. சுமார் ஒரு மாத காலம் இந்த பணி நடைபெறும் என்பதால் வாகனங்கள் வந்து செல்ல மாற்றுப்பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இதில் ரங்கம்பாளையம் பகுதிக்கு செல்ல எளிய பாதையாக கே.கே.நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முத்தம்பாளையம் பகுதி 7 வழியாக ரங்கம்பாளையம் செல்லும் வழி உள்ளது.
ஆனால் இந்த பாதை ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டி மண் ரோடாகவும், கரடு முரடாகவும் உள்ளது. அதுமட்டுமின்றி பாதையின் 2 பக்கமும் முள்செடிகள் வளர்ந்து பாதையை சூழ்ந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு புதராக இருந்தது. ஆனால் வேறு வழி இல்லாத வாகன ஓட்டிகள் இந்த வழியாக சென்று வந்தனர். பெண்கள், மாணவ-மாணவிகள் மற்றும் அனைத்து வாகன ஓட்டிகளும் முள்புதர் காரணமாக கடும் பாதிப்பு அடைந்தனர். எனவே இந்த பாதையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.
பாராட்டு
இதுதொடர்பான செய்தி நமது "தினத்தந்தி"யில் நேற்று முன்தினம் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக வெளி வந்தது. அதைத்தொடர்ந்து உடனடி நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்தனர். நேற்று காலையிலேயே பொக்லைன் எந்திரம் மூலம் தற்காலிக பாதையை அடைத்துக்கொண்டு நின்ற முள் மரங்கள், செடிகள் அகற்றப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமின்றி பயணிக்கும் சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, 'இந்த தற்காலிக பாதையில் வாகனங்கள் 15 நாட்களுக்கும் மேலாக சென்று வருகின்றன. மிகவும் சிரமப்பட்டு இந்த பாதையில் வாகனங்கள் ஓட்டி வந்தோம். எங்கள் கோரிக்கை "தினத்தந்தி"யில் செய்தியாக வெளியிடப்பட்டு இருந்தது. அதன் உண்மை தன்மையை உணர்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து முள்புதர்களை அகற்றி இருக்கிறார்கள். இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்து உள்ளது. அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், கரடு முரடாக இருக்கும் பாதையை சற்று சீரமைத்து கொடுத்தால் கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் சிரமமின்றி செல்ல ஏதுவாக இருக்கும். ஏராளமான 2 சக்கர வாகனங்களில் பெண்களும் செல்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பு கருதி சாலையை சமன்படுத்திக்கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கிறோம்' என்றனர்.