தினத்தந்தி செய்தி எதிரொலி; ரூ.12 கோடியில் கட்டப்பட்ட உண்டு உறைவிட பள்ளி திறப்பு


தினத்தந்தி செய்தி எதிரொலி; ரூ.12 கோடியில் கட்டப்பட்ட உண்டு உறைவிட பள்ளி திறப்பு
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் குமிழி பகுதியில் கட்டப்பட்ட ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியை திறந்துவைத்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பட்டிபுலம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைக்கால பேரிடர் கட்டிடத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இருளர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு அரசு முடிவு செய்து கண்டிகை அருகே உள்ள குமிழி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் ரூ.12 கோடி மதிப்பில் இருளர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் சகல வசதிகளுடன் கட்டப்பட்டது. இதை உடனடியாக மாணவர்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க வேண்டும் என்று கடந்த 30-ந்தேதி தினத்தந்தி நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதன் எதிரொலியாக நேற்று காலை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் குமிழி பகுதியில் கட்டப்பட்ட ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியை திறந்துவைத்தார்.

குமிழியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், நிர்வாக பொறியாளர் அன்பு பிரியா, ஒன்றியக்குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றியக்குழு துணை தலைவர் ஆராமுதன், குமிழி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி கோதண்டபாணி, ஒன்றிய கவுன்சிலர் சித்ரா ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story