'தினத்தந்தி' செய்தி எதிரொலி:ரேஷன் அரிசியை ஆய்வு செய்த அதிகாரிகள்


தினத்தந்தி செய்தி எதிரொலி:ரேஷன் அரிசியை ஆய்வு செய்த அதிகாரிகள்
x
தினத்தந்தி 17 Aug 2023 6:45 PM GMT (Updated: 17 Aug 2023 6:45 PM GMT)

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக, கோரையூத்து கிராமத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் அரிசியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தேனி

ரேஷன் அரிசி

வருசநாடு அருகே கோரையூத்து கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பழுப்பு நிறத்தில் அரிசி வழங்கப்பட்டது. மேலும் அந்த பழுப்பு நிற அரிசிகளுக்கு இடையில் வெள்ளை நிறத்திலான அரிசிகள் காணப்பட்டன. இதுகுறித்து பொதுமக்கள் ரேஷன் கடை பணியாளர்களிடம் கேட்டனர்.

அப்போது ரேஷன் கடை பணியாளர்கள் வெண்மை நிறத்தில் இருப்பது செறிவூட்டப்பட்ட அரிசி என தெரிவித்தனர். ஆனால் அதுகுறித்து அறியாத பொதுமக்கள் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்துள்ளது என அச்சமடைந்தனர். இதனால் அந்த அரிசியை பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது.

அதிகாரிகள் ஆய்வு

இதன் எதிரொலியாக, நேற்று நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் கோரையூத்து கிராமத்திற்கு சென்றனர். பின்னர் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியை பொதுமக்களிடம் இருந்து வாங்கி சோதனை மேற்கொண்டனர். அப்போது ரேஷன் அரிசியில் கலந்திருப்பது செறிவூட்டப்பட்ட அரிசி தான் என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் பொதுமக்களை அழைத்து தற்போது அனைத்து ரேஷன் கடைகளிலும் 100 கிலோவிற்கு 1 கிலோ வீதம் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படுகிறது என்று தெரிவித்தனர். மேலும் செறிவூட்டப்பட்ட அரிசி, அதன் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்து கூறினர். இதனை கேட்ட பொதுமக்கள் அச்சம் நீங்கி அரிசியை பயன்படுத்த தொடங்கினர். இந்த ஆய்வில் ஆண்டிப்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாரதி மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story