பால்வளத் துறை சீர்குலைந்து கிடக்கிறது -அண்ணாமலை அறிக்கை
தமிழகத்தில் பால்வளத் துறை மிகவும் சீர்குலைந்து கிடக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஒவ்வொரு துறைகளிலும் முறைகேடுகள் வெளிப்படையாகவே நடக்கின்றன. குறிப்பாக, ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே பால்வளத்துறையின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமாகவே இருந்து வருகிறது.
அளவுக்கதிகமான முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் காரணமாக, பால்வளத் துறை அமைச்சராக இருந்த நாசர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அமைச்சர் மனோ தங்கராஜ் பொறுப்பேற்றார். இவருக்கு அவரே பரவாயில்லை என்ற அளவில் பால்வளத் துறையின் நிலை தற்போது மிகவும் சீர்குலைந்து கிடக்கிறது.
பாலில் உள்ள கொழுப்புச் சத்தின் அளவைக் குறைத்து, தரத்தையும் குறைத்து, பால் பாக்கெட் நிறத்தை மட்டும் மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம், பொதுமக்கள் மீது விலை உயர்வைச் சுமத்தியிருக்கிறார்.
அதிகார துஷ்பிரயோகம்
இவை அனைத்துக்கும் உச்சமாக, ஆவின் நிறுவனப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர் நிறுவனம் ஒன்றை, தனக்கு வேண்டப்பட்ட நிறுவனம் ஒன்றிற்கு துணை ஒப்பந்தம் வழங்குமாறு அமைச்சரின் உதவியாளர் ஒருவர் நிர்ப்பந்தித்ததாக, ஒரு நிறுவனம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம் இது. அரசு நிறுவனப் பணிகளை, தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்க, ஒப்பந்தத்தில் முறைகேடுகள் செய்வது, ஒப்பந்த நிறுவனங்களை மிரட்டுவது என ஒவ்வொரு நாளும் முறைகேடுகள் எல்லையற்றுச் சென்று கொண்டிருக்கின்றன.
ஆவின் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் திசை மாறி, ஆளும்கட்சி பணம் சம்பாதிக்க உதவும் மற்றொரு அரசு நிறுவனமாக முடக்கப்பட்டுள்ளது.
தவறு செய்தவர்களுக்கான தண்டனைகள் சிறிது காலம் தள்ளிப் போகலாம் ஆனால் தப்பித்து விட முடியாது என்பதனை, மக்கள் பணத்தை விதவிதமாகத் திருடும் கூட்டம் வெகு விரைவில் உணரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.